பவானிக்கு வந்து சேராத பவானிசாகர் தண்ணீர்! ஆறு வறண்டதால் குடிநீர்த் திட்டங்கள் முடங்கும் அபாயம்

பவானிசாகர் அணையிலிருந்து குடிநீருக்காக ஆற்றில் திறக்கப்படும்  தண்ணீர் பவானிக்கு வந்து சேருவதில்லை.

பவானிசாகர் அணையிலிருந்து குடிநீருக்காக ஆற்றில் திறக்கப்படும்  தண்ணீர் பவானிக்கு வந்து சேருவதில்லை. இதனால், பவானி ஆற்றின் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ள கிராமங்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதுடன், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
பவானி ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளுக்கும் பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு,  குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணை தொடங்கி, ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் நெடுந்தொலைவுக்கு குழாய்கள் மூலமாகக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. 
இதற்கென 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில்,  தற்போது பவானிசாகர் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் தண்ணீர் இறுதிப் பகுதியான பவானிக்கு வந்து சேராத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,  பவானிக்கு அருகில் செயல்படுத்தப்படும் 5-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கே தண்ணீர் கிடைப்பதில்லை. 
இதனால், இத்திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணறுகளுக்குத் தண்ணீர் எட்டாததால், நீரேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வைரமங்கலம்,  சிறைமீட்டான்பாளையம்,  தளவாய்பேட்டை ஆகிய பகுதிகளில் நீர் உறிஞ்சும் புதைகிணறுகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் உறிஞ்சப்பட்டு, குடிநீர்த் திட்டங்கள் மூலமாக ஜம்பை, ஒலகடம் பேரூராட்சிப் பகுதிகளுக்கும்,  காடையம்பட்டி திட்டம் மூலமாக காடையம்பட்டி ஊராட்சிக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 
மேலும்,  வைரமங்கலம், சிறைமீட்டான்பாளையம், குட்டிபாளையம், நல்லாம்பட்டி, பேரோடு, பெரியபுலியூர், தயிர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் மூலமாகத் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரித்து விநியோகம்  செய்யப்பட்டு வருகிறது. தற்போது பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தளவாய்பேட்டை பகுதிக்கே வந்து சேருவதில்லை. 
விநாடிக்கு 200 கன அடி திறக்கப்படும் தண்ணீர்,  20 கன அடிகூட வருவதில்லை. இதனால், இங்குள்ள நீர் உறிஞ்சும் புதைகிணறுகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல ஆற்றுக்குள் வெட்டப்பட்டுள்ள வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. மிகக் குறைந்த அளவே தண்ணீர் வருவதால், வரும் தண்ணீர் அணைபோட்டுத் தடுக்கப்பட்டு நீரேற்றம் செய்யப்படும் பகுதிகளுக்கு திருப்பிவிடப்படுகிறது. இங்குள்ள 6 புதைகுழிகளில் 5 கிணறுகளுக்குத் தண்ணீர் எட்டுவதில்லை என குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பேரோடு குடிநீர்த் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கமுடியாததால் சிறைமீட்டான்பாளையத்தில் ஆற்றை முற்றிலும் தடுத்து, தண்ணீரைத் தேக்கி, நீரேற்றம் செய்யப்படுகிறது. 
அனுமதிக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் மட்டுமின்றி, அனுமதியின்றி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுவதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால்,  நீரின்றி வறண்டும், வாய்க்கால் போன்று குறுகியும்போன பவானி ஆற்றில் குடிநீருக்கே தண்ணீரைத் தேடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் தண்ணீர் தடையின்றிக் கிடைப்பதை  உறுதி செய்யவேண்டும் என கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com