பழங்குடியினருக்கான பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை

பழங்குடியினருக்கான மலைக்கிராமப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிப்பதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கான மலைக்கிராமப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிப்பதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் எழுத்தறிவு 80 சதவீதம் உள்ள நிலையில், பழங்குடியினர் எழுத்தறிவு விகிதம் 54 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் பழங்குடியினரின் எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகளின் நிலையை  கவனிக்க வேண்டியது அரசின் கடமை. கல்வி, அடிப்படை வசதி, தொழில் வளர்ச்சி என அனைத்திலும் மலைப் பகுதி புறக்கணிக்கப்படுவதாக  அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
155 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக 2017 ஜூன் மாதம் தரம் உயர்த்தப்பட்டன. அதில், 150 பள்ளிகள் பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலும், 5 பள்ளிகள் பழங்குடியினர் நலத் துறையின்  கட்டுப்பாட்டிலும் உள்ளன.
பள்ளி கல்வித் துறை சார்ந்த 150 பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதால், தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம், திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 2 பள்ளி,  ஈரோடு மாவட்டத்தில் ஒரு பள்ளி என பழங்குடியினரின் தரம் உயர்த்தப்பட்ட 5  பள்ளிகளிலும் எந்த முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப் பகுதியில் போக்குவரத்து வசதியற்ற கொங்காடை மலைக் கிராமத்தில் ஒரு பள்ளி உள்ளது. அப்பகுதியில் ஊராளி எனும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்தியூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள இப்பகுதிக்கு சரக்கு வாகனம், மினி லாரிகளில்தான் மக்கள் பயணிக்கின்றனர்.
கொங்காடை பகுதியில் பெரியூர், சுண்டைப்போடு, அக்னிபாவி, செங்குளம், கோவில்நத்தம் என 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ள நிலையில், இப்பகுதியில், பழங்குடியினர் நலத் துறை மூலம், 1993 இல் துவக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இதையடுத்து இப்பள்ளி 1998 இல் நடுநிலைப்  பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியைச்  சுற்றி, பள்ளி கல்வித் துறை மூலம் 4 தொடக்கப் பள்ளிகள், 3 குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அருகில்  உயர்நிலைப் பள்ளி ஏதுமில்லாத காரணத்தால்  8 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய நிலையில் இப்பகுதி மாணவர்கள் உள்ளனர்.
இதையடுத்து,  சமவெளியில் உள்ள நிறுவனங்களில் வேலைக்காக மாணவர்கள் செல்கின்றனர். மாணவிகளுக்கு வேறு வழியின்றி திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மேலும், பள்ளி இடை நிற்றலும், குழந்தைத் தொழிலாளர் முறையும், குழந்தை திருமணமும் அதிகரிக்கிறது. இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உடனடியாக இப்பள்ளிகளுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளுடன், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, மலைவாழ் பள்ளிகளை அரசுடன் இணைந்து நடத்திவரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகால தொடர் முயற்சியால் 2017 இல்  இப்பள்ளி உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் 2018 ஜூனில் 9 ஆம் வகுப்பில் 50 மாணவர்கள் சேர்ந்தனர். அரையாண்டுத் தேர்வு முடிந்து  மூன்றாம் பருவ வகுப்பு துவங்கிய நிலையிலும், உயர்நிலைப் பள்ளிக்கான அரசாணை வழங்கப்படவில்லை. அதன் காரணமாக இன்று வரை தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி என பிரிக்கப்படவில்லை. உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. புதிய கூடுதல் கட்டடம், அடிப்படை வசதிகளுக்கும் வழிபிறக்கவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. பாடத்தை, ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தும் தனியார் பள்ளிகள் நிறைந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளில் கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர,  இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 7 ஆசிரியர் பணியிடங்களில் 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 3 இடங்கள் காலியாக உள்ளன. உயர்நிலைக்கு ஆசிரியர் இல்லாததால் தற்போதுள்ள ஆசிரியர்களே  உயர்நிலை வகுப்புகளையும் கவனிக்கும் அவலம் தொடர்கிறது. இதுபோன்ற அரசின் கவனிப்பற்ற நிலையால், எழுத்தறிவு சதவீதம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வித் துறை இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com