ஈரோட்டில் போக்குவரத்துப் பூங்கா திறப்பு
By DIN | Published On : 12th August 2020 01:03 PM | Last Updated : 12th August 2020 01:03 PM | அ+அ அ- |

ஈரோட்டில் போக்குவரத்துப் பூங்கா திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்கள்
ஈரோடு மோளகவுண்டன்பாளையத்தில் ரூ 75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போக்குவரத்துப் பூங்காவை சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் மோளகவுண்டன் பாளையத்தில் போக்குவரத்து பூங்கா ரூ .75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா புதன்கிழமை காலை நடந்தது. ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கத்துரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் இளங்கோவன். நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏக்கள் கே.வி ராமலிங்கம். கே.எஸ் தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போக்குவரத்துப் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி பருவத்திலேயே போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த போக்குவரத்துப் பூங்காவில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு மாதிரி போக்குவரத்து சிக்னல்கள், சமிஞ்சைகள் எச்சரிக்கை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவ மாணவிகளுக்காக போக்குவரத்து குறித்த டிஜிட்டல் வகுப்பறைகள் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் பத்துக்குட்பட்ட மாணவ-மாணவிகள் செல்லலாம். இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை கூறும்போது, “புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்துப் பூங்கா 20, 759 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இந்த பூங்காவில் சிறு போக்குவரத்து பாதை, அனைத்து போக்குவரத்து குறியீடுகள், குழந்தை விளையாட விளையாட்டு மைதானம், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த எல்.இ.டி ப்ரொஜெக்டர் உடன் கூடிய சிறு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான சாலைப் பயணம், சாலை விபத்தை தடுப்பது போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அம்சம் உள்ளது.
இந்த பூங்காவை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். விழாவில் பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ், கோவிந்தராஜ், தங்கமுத்து, ஆவின் துணை தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.