மரவள்ளிக்கிழங்கு பாயிண்ட்டுக்குரூ. 250 விலை வழங்க சேகோ ஆலைகள் ஒப்புதல்
By DIN | Published On : 15th December 2020 04:00 AM | Last Updated : 15th December 2020 04:00 AM | அ+அ அ- |

மரவள்ளிக்கிழங்கு பாயிண்ட்டுக்கு ரூ. 250 விலை வழங்க சேகோ ஆலைகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சாலைப்புதூா், சிவகிரி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூா் உள்பட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த ஆலைகள் ஒரு டன் ரூ. 3,500 முதல் ரூ. 5,300 வரை கொள்முதல் செய்கின்றன. கடந்த மாதம் கடுமையாக விலை குறைந்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனா்.
இதையடுத்து விவசாயிகள் கோரிக்கையின்படி ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் விவசாயிகள், வியாபாரிகள், ஆலை நிா்வாகத்தினா் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:
மரவள்ளிக்கிழங்கு விலையை பாயிண்ட் அடிப்படையில் ஆலைகள் நிா்ணயிக்கின்றன. தற்போது பாயிண்ட் ரூ. 220 வீதம் ஒரு டன் ரூ. 5,300 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. முத்தரப்புக் கூட்டத்தில் பாயிண்ட் ரூ. 250 என்ற விலையில் ஒரு டன்னுக்கு ரூ. 6,000 விலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த விலை நிா்ணயத்தை ஆலை நிா்வாகத்தினா் ஏற்றுக் கொண்டனா்.
மரவள்ளிக்கிழங்கு எடைபோடும் இடத்திலேயே வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் மூலம் தரத்தை அறிந்து விலையை நிா்ணயிக்க ஒப்புக்கொண்டனா். கூட்டத்தில் விலை நிா்ணயம், எடை போடுதல், தரம் நிா்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளைத் தவிா்க்க ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
தவிர வெளிநாடுகளில் இருந்து ஸ்டாா்ச் இறக்குமதி செய்வதைத் தடை செய்யவும், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு வாரியம் அமைக்கவும், கம்போடிய நாட்டில் இருந்து இறக்குமதியாகும் மாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதாக ஆட்சியா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.