சொந்த மாநிலங்களுக்கு செல்ல திரண்ட வடமாநில தொழிலாளர்கள்: காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்
By DIN | Published On : 18th May 2020 02:53 PM | Last Updated : 18th May 2020 02:53 PM | அ+அ அ- |

சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கக்கோரி ஈரோட்டில் ஓரே இடத்தில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் ஏராளமான சாய, சலவை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மாரச் மாதம் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் ஈரோட்டில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஈரோடு கருங்கல்பாளையம் பம்பிங் ஸ்டேஷன் சாலையில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் திரண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வடமாநில வாலிபர்கள் தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது வடமாநில இளைஞர்கள் நாங்கள் சொந்த ஊர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்காக ஆட்சியரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். அதற்கு காவல்துறையினர் இப்போது ஆட்சியரை சந்திக்க வேண்டாம் நாங்கள் உங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் தெரிவிக்கிறோம் என்றனர். ஆனால் ஆட்சியரை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்து செல்ல முயன்றனர். இதனால் காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டிஎஸ்பி ராஜு வடமாநில இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறினர். இதனையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.