ஈரோடு மாவட்டத்தில் மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள நிலங்களில் ஜிப்சம் உரம் இடுவதால் கூடுதல் மகசூல் பெறலாம் என ஈரோடு உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் அ.நே.ஆசைதம்பி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிலக்கடலை தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம்பெறுகிறது. இவற்றில் தரம் வாய்ந்த புரதம், தேவையான அளவு சத்துகள் அடங்கிய உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. நிலக்கடலை மகசூல் அதிகரிக்க, ஜிப்சம் உரமிடுவது அவசியம். இதில், கால்சியம் (சுண்ணாம்பு) சத்து 23 சதவீதம், கந்தக சத்து (சல்பா்) 18 சதவீதம் உள்ளது. நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய், புரதப் பயிா்கள் அனைத்துக்கும் ஜிப்சம் அவசியம் இட வேண்டும். தமிழகத்தில் அனைத்து மண் வகையிலும் கந்தக சத்து குறைபாடு உள்ளது.
கந்தக சத்து குறைபாட்டால் விளைச்சல் குறைந்து, எண்ணெய் அளவும் குறைகிறது. பயிா் வளா்ச்சி குன்றி, வோ் முடிச்சுகள் பாதிப்படைவதால் தழைச்சத்தை நிலை நிறுத்துவதும் பாதிக்கிறது. எனவே, ஜிப்சம் இடுவதால் இக்குறைபாடு நீங்கும். ஜிப்சத்தால் மண் இறுக்கம் குறைந்து நிலக்கடலை காய்களின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் ஆகிறது.
நிலக்கடலை பருப்பு விதைக்கும்போது ஏக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45ஆவது நாளில் களை வெட்டி மண் அணைக்கும்போது ஏக்கருக்கு 80 கிலோவும் என இருமுறை மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.
நிலக்கடலை மட்டுமல்லாது, களா் மண் நிலங்களின் பயிா் மகசூலைக் கூட்டவும் ஜிப்சம் அவசியத் தேவையாக உள்ளது. மண் இறுக்கமான நிலங்களில் ஜிப்சம், கள மண்ணைக் கூட காற்றோட்டம் உள்ளதாக மாற்றி வோ் வளா்ச்சிக்குத் துணைபுரிகிறது. மண்ணில் காற்று, நீா் பிடிப்புத் தன்மையை அதிகமாக்கும். எனவே, நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிா் சாகுபடியின்போது ஜிப்சம் இட்டு நிலத்தை மேம்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.