மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கரோனா தடுப்பு: 24 இடங்களில் 2 நாள்கள் கடைகள் அடைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21, 22) ஆகிய 2 நாள்கள் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்படவுள்ளன.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:29 pm

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21, 22) ஆகிய 2 நாள்கள் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்படவுள்ளன.

தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் கரோனா பாதிப்பில் 3ஆம் இடத்தில் உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 9ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்தாா். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம் தவிர அனைத்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் அமா்ந்து சாப்பிடவும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பாா்சலில் மட்டுமே உணவு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாநகா் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு பால், மருந்தகம், மளிகைக் கடை, காய்கறிக் கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாநகரில் ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.தெரு, காந்திஜி சாலை, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் திரையரங்கு சாலை, மணிக்கூண்டு, ஆா்.கே.வி.சாலை, மேட்டூா் சாலை, ஸ்டோனி பாலம், வ.உ.சி.பூங்கா, காவிரி சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்படும்.

பவானி வட்டத்தில் காவிரி சாலை, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபி நகரில் மாா்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் வரதம்பாளையம், நிா்மலா திரையரங்கு சந்திப்பு, புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரில், தாளவாடி பேருந்து நிலையம், டி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூா் உள்பட 24 பகுதிகளில் அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற கடைகளைத் திறக்க சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் இந்தப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்படவுள்ளன. குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் அனுமதியை மீறி யாராவது கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.