கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரம்

உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வடிந்ததால் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் தொடங்கி உள்ளனர்.
கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரம்

உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வடிந்ததால் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் தொடங்கி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து உடைப்பு ஏற்படாத வகையில் வினாடிக்கு 1000 கனஅடி மட்டுமே திறந்துவிடப்பட்டிருந்தது.

ஆனாலும் பல்வேறு இடங்களில் லேசான கசிவு ஏற்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை சரி செய்தனர்.

இந்நிலையில், ஈரோடு  நசியனூர் அருகே மலைப்பாளையம் கிராமத்தில் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில் மதகு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு லேசான கசிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சரி செய்யப்பட்டது. ஆனால் தண்ணீரின் அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் காலை திடீர் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் விளைநிலங்களுக்குள் வெளியேறியது.

இதனால் பெரிய விளாமலை ஊராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம், வரவன்காடு, மலைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பிரதான வீதி, கிழக்கு வீதி ஆகிய பகுதியில் இருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததோடு  நெற்பயிர் மற்றும் மஞ்சள்கள் ஆகியவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகளில் தண்ணீர் சூழ்ந்த 62 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் பாதுகாப்பான இடத்தில் 2வது நாளாக இன்றும் தங்க வைக்கப்பட்டு வருவாய்துறை சார்பில் உணவு, உடைகள் வழங்கப்பட்டன.

வாய்க்காலின் மேல்பகுதியில் ஆங்காங்கே மதகுகள், அவசர கால மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில்,இன்று மதியத்திற்கு மேல் தண்ணீர் வெளியேறுவது கட்டுக்குள் வந்தது.

இதைத்தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறையினர் செப்பனிடும் பணிகளை தொடங்கி உள்ளனர். இப்பணிகளை 10 நாட்களில் முடிக்க பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்ணீர் வெளியேறியதால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்ததையடுத்து அதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே உடைப்பு காரணமாக விளைபயிர்கள் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 3 நாட்களில் சேதமதிப்பு விபரங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com