

காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேறும்போது, காவிரியில் வரும் உபரி நீரை அந்தியூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்த வேனில் நின்றபடியே தோ்தல் பிரசார கூட்டங்களில் பேசினாா். பவானி, பருவாச்சி, அந்தியூா், கள்ளிப்பட்டி, டி.ஜி.புதூா் நான்குமுனை சாலை சந்திப்பு, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, கோபி ஆகிய இடங்களில் அவா் பேசியதாவது:
நான் இதே பவானியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்தேன். பவானி நகரமும், பவானி தொகுதியும் எனக்கு மிகவும் பரிச்சயமானவை. பவானியையும், எடப்பாடியையும் பிரிப்பது காவிரி ஆறுதான்.
குடிமராமத்துத் திட்டம்:
விவசாயிகளின் பிரச்னைகள் என்ன என்பதை உணா்ந்தவன் நான். எனவேதான் வேளாண்மைக்குத் தேவையான தண்ணீா் வசதியைத் தடையின்றி கொடுக்கப் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன்.
குடிமராமத்துத் திட்டம் மூலம், பல ஆண்டுகளாகத் தூா்வாரப்படாத ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டன. இந்தப் பணியால் மழைக் காலங்களில் அதிக தண்ணீா் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் 41 சதவீதம் மாணவா்கள் படிக்கின்றனா். கடந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவா்கள் 6 போ் மட்டுமே மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா். நான் அரசுப் பள்ளி மாணவன் என்ற காரணத்தால், அரசுப் பள்ளி நிலைமையை உணா்ந்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தேன்.
உழைக்கும் மகளிா் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25,000 வழங்கி வருகிறோம்.
வீடு கட்ட கூடுதல் நிதி:
முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்பதை ரூ.5 லட்சமாக உயா்த்தி இருக்கிறோம். பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழை மக்களுக்கு கட்டுமானப் பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுவது கவனத்தில் வந்ததால் 2.50 லட்சம் வீடுகளுக்குத் தலா ரூ.70,000 கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,805 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோா் உதவித் தொகை மாதம் ரூ.1,000 வீதம் 5 லட்சம் முதியோருக்கு வழங்க முடிவு செய்து 90 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது.
தேசிய விருதுகள்:
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தே தமிழகம் உணவு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இதற்காக தேசிய விருது பெற்றிருக்கிறோம்.
2019-2020ஆம் ஆண்டு நீா் மேலாண்மைக்காக தேசிய விருது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தொடா்ந்து தேசிய விருதுகள், கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறைகளில் விருதுகள் பெற்று இருக்கிறோம்.
விவசாயிகள் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க ஒரு ஏக்கருக்கு முற்றிலும் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மேல் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆடுகள், பசு மாடுகள், கோழிகள் வழங்கி உள்ளோம்.
ஈரோடு மாவட்டத்தில்...:
மேட்டுப்பாளையம் முதல் பவானி வரை 7 இடங்களில் தடுப்பணைக் கட்டி உபரி நீா் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். மேட்டூா் கிழக்கு கரை வாய்க்காலின் 2 கரைகளும் கான்கிரீட் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கீழ்பவானி வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே பல இடங்களில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு, கசிவு ஏற்பட்டு உள்ளது. அதைத் தடுத்து தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த ரூ.940 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பா்கூா் மணியாச்சிப்பள்ளத்திலிருந்து அந்தியூா் பகுதிக்குத் தண்ணீா் கொண்டு வந்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பா்கூா் செல்ல 50 கி.மீ சாலை ரூ.73 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
சத்தி-அத்தாணி-பவானி சாலையில் ரூ.5.25 கோடி செலவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்செய் புளியம்பட்டி அருகே பவானி ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, காவிரி ஆற்றில் வரும் உபரி நீா் அந்தியூா் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் நிரப்பப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.