பவானி: ஆக்கிரமிப்பில் இருந்த வாகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 10.23 ஏக்கர் நிலம் மீட்பு

பவானி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வாகீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 10.23 ஏக்கர் நிலம் நேற்று (செப்-2) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கோயில் நிலம் குறித்த விளம்பர பலகை வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.
கோயில் நிலம் குறித்த விளம்பர பலகை வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.
Published on
Updated on
1 min read

பவானி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வாகீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 10.23 ஏக்கர் நிலம் நேற்று (செப்-2) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பட்லூர் கிராமத்தில் வாகீஸ்வரர் கோயில், சென்றாயப் பெருமாள் கோயில் மற்றும் கரிய காளியம்மன் கோயில்கள் உள்ளன. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில்கள் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இக்கோயில்களுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன.இந்நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது. இதனால், இந்நிலங்கள் கடந்த 2013-ஆண்டு கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. இந்நிலங்களை சாகுபடி செய்தவர்கள் திருக்கோயிலுக்கு குத்தகை செலுத்தவில்லை. இதனால், குத்தகை செலுத்தாதோர் மீது இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78-ன் கீழ் கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரியகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான புல எண் 146-ல் உள்ள 12.40 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள 6 பேர் மீது கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 வழக்குகளில் 4 வழக்குகளுக்கு 7.75 ஏக்கர் நிலமும், வாகீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான புல எண் 579/3 ல் உள்ள 2.48 ஏக்கர் நிலமும் கோயில் நிர்வாகம் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றி சுவாதீனம் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோ. செ. மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தக்கார் ப.சந்திரகலா, அந்தியூர் பிரிவு ஆய்வாளர் மாணிக்கம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து , மீட்கப்பட்ட நிலங்களின் எல்லைப் பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com