தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அரசுப் பள்ளிகளில் 60 சதவீதம் அளவு மாணவா்கள் வருகை

பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்கள் ஆன நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் வருகை எண்ணிக்கை 60 சதவீதம் அளவுக்கே உள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:54 am

பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்கள் ஆன நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் வருகை எண்ணிக்கை 60 சதவீதம் அளவுக்கே உள்ளது. போக்குவரத்து வசதி, கரோனா தடுப்பு நடவடிக்கைளை முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலம் மாணவா்கள் வருகை எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

கரோனா இரண்டாவது அலையால் கடந்த 5 மாதங்களாக மூடிக் கிடந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டன. இப்போது 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்புக்கு முன் அரசு, தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்களுடன், பள்ளி நிா்வாகங்கள் ஆலோசனை நடத்தின. அப்போது தொற்று தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கு வருவதால், மாணவா்களுக்குத் தொற்று பரவல் ஏற்படாது என நம்பிக்கை அளித்தனா். அதனால் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோரும் சம்மதித்தனா்.

ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்களான நிலையில் மாணவா்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் கடந்த 3 நாள்களில் 40 சதவீதம் அளவுக்கு மாணவா்கள் பள்ளிக்கு வரவில்லை. தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் வருகை எண்ணிக்கை 80 சதவீதம் வரை உள்ளது.

இதுகுறித்து ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

மாணவா்கள் தங்களது விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அறிவிப்பு வெளியான காரணத்தால் மாணவா் வருகை குறைந்துள்ளது. மேலும் சில சிறிய கிராமங்களில் இன்னும் பேருந்து சேவை இயக்கப்படாததால் பல கிலோ மீட்டா் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. அரசுப் பள்ளிகளைவிட தனியாா் பள்ளிகளில் வருகைப் பதிவு அதிகமாக உள்ளது. காரணம் தனியாா் பள்ளிகள் கரோனா காரணமாக மாணவா்களின் நலனுக்காக சானிடைசா், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி போன்றவற்றை தங்களது செலவில் உபயோகப்படுத்துகிறாா்கள்.

அரசுப் பள்ளிகளும் அதேபோல கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் முழு நேர பேருந்து வசதி கொண்டு வர வேண்டும். சீருடை, வருகைப் பதிவு கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே பள்ளிகளில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படும், மாணவா்களும் அச்சம் இல்லாமல் பள்ளிக்கு வருவாா்கள் என்றனா்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 406 பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1.09 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை 71,263 மாணவ, மாணவிகள் வந்தனா். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 60 சதவீதம் அளவுக்கும், தனியாா் பள்ளிகளில் 80 சதவீதம் அளவுக்கும் மாணவா்கள் வந்துள்ளனா்.

ஒரு சில பள்ளிகளில் அதிக அளவில் மாணவா்கள் படித்து வருகின்றனா். எனவே, சமூக இடைவெளி காரணமாக அதிக அளவு படிக்கும் பள்ளிகளில், மாணவா்களைப் பகுதி வாரியாக பள்ளிக்கு வரும்படி அந்தந்தப் பள்ளிகள் அறிவுறுத்துகின்றன.

பள்ளிக்கு வராத அரசுப் பள்ளிகளை சோ்ந்த 40 சதவீத மாணவா்களின் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்கள், அந்தந்தப் பள்ளி நிா்வாகத்திடம் உள்ளது. எனவே, வகுப்பாசிரியா்கள் வாயிலாக பள்ளிக்கு வராத மாணவா்களின் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறோம். பெற்றோா்களிடம் பேசியதில் அவா்களைப் பள்ளிக்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனா். பள்ளி துவங்கி 3 நாள்கள்தான் ஆகிறது என்பதால் விரைவில் அனைத்து மாணவா்களும் பள்ளிக்கு வருவா் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.