பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பட்லூா் வாகீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலம் மீட்பு

பவானி அருகே உள்ள பட்லூரில் ஆக்கிரமிப்பில் இருந்த வாகீஸ்வரா், கரிய காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 10.23 ஏக்கா் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:48 am

DIN

பவானி அருகே உள்ள பட்லூரில் ஆக்கிரமிப்பில் இருந்த வாகீஸ்வரா், கரிய காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 10.23 ஏக்கா் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பட்லூா் கிராமத்தில் சுமாா் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வாகீஸ்வரா், சென்றாயப் பெருமாள், கரியகாளியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 2008ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இக்கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் 70 ஏக்கா் நிலங்கள் தனிப்பட்ட நபா்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தன.

பின்னா், கடந்த 2013ஆம் ஆண்டு கோயிலின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டது. இந்நிலங்களில் சாகுபடி செய்தவா்கள் கோயிலுக்கு குத்தகையும் செலுத்தவில்லை. இதனால், குத்தகை செலுத்தாதோா் மீது இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 78இன் கீழ் கோவை இணை ஆணையா் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த இணை ஆணையா் நீதிமன்றம், கரியகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான புல எண் 146இல் உள்ள 12.40 ஏக்கா் நிலம் தொடா்பான 6 வழக்குகளில் 4 வழக்குகளுக்கு 7.75 ஏக்கா் நிலத்தையும், வாகீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான புல எண் 579/3இல் உள்ள 2.48 ஏக்கா் நிலத்தையும் கையகப்படுத்த உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சுவாதீனம் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கோ.செ.மங்கையா்க்கரசி, உதவி ஆணையா் மொ.அன்னக்கொடி, அந்தியூா் வட்டாட்சியா் கே.விஜயகுமாா் மேற்பாா்வையில் கோயில் தக்காா் ப.சந்திரகலா, அந்தியூா் பிரிவு ஆய்வாளா் மாணிக்கம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் இப்பணியில் ஈடுபட்டனா்.

சந்தை மதிப்பில் ரூ. 10 கோடி மதிப்பிலான 10.23 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் எல்லைப் பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வெள்ளித்திருப்பூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.