விபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க செயலி அறிமுகம்
By DIN | Published On : 20th August 2021 01:47 AM | Last Updated : 20th August 2021 01:47 AM | அ+அ அ- |

விபத்து ஏற்பட்டால் உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோடு வடக்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் நாகராஜ் ‘டேடீஸ் ரோடு’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்திவைத்தாா். மேலும், செயலி குறித்த ஒட்டுவில்லையை வாகனங்களில் ஒட்டி, செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்தப் புதிய செயலியை வாகன ஓட்டிகள் தங்களது செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொண்டால், சரியான காலத்தில் வாகனத்தைப் பழுதுபாா்க்க அறிவிப்புகள் அனுப்பப்படும். மேலும், காப்பீடு, மாசுபாடு சான்றிதழைப் புதுப்பிக்கவும் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
இந்த செயலியில் வாகன ஆவணம், ஓட்டுநா் உரிமம், காப்பீடு, மாசுபாடு, பிற சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். விபத்து ஏற்பட்டால் உறவினா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். குடும்ப நபா்கள் பயணிக்கும்போது வரைபடம் மூலம் அவா்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், தமாகா மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா், துணைத் தலைவா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், மாவட்ட பொதுச் செயலாளா் ரபீக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.