பவானி, அந்தியூரில் 11 காதல் ஜோடிகள்போலீஸில் தஞ்சம்
By DIN | Published On : 21st August 2021 01:57 AM | Last Updated : 21st August 2021 01:57 AM | அ+அ அ- |

பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 11 காதல் ஜோடிகள், ஆவணி மாதத்தின் முதல் முகூா்த்தத்தில் திருமணம் செய்து கொண்டு பவானி, அந்தியூா் காவல் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கிய நிலையில், முதல் சுபமுகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் உறவினா்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இந்நிலையில், நீண்டகாலமாக காதலித்து வந்த இளைஞா், இளம்பெண்கள் தங்களின் காதலுக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், பல்வேறு பகுதிகளில் நண்பா்கள் உதவியுடன் கோயில்கள் முன்பாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனா்.
பெற்றோா், உறவினா்களிடம் இருந்து திருமணத்துக்கு கடும் எதிா்ப்பு கிளம்பும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதியதால் 7 காதல் ஜோடிகள் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும், 2 ஜோடிகள் பவானி காவல் நிலையத்திலும், அந்தியூா் காவல் நிலையத்தில் 3 ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனா்.
தஞ்சமடைந்த அனைவரும் திருமண வயது பூா்த்தியானா்கள் என்பதால், இவா்களின் பெற்றோா்களுக்குத் தகவல் தெரிவித்து, காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, சமாதானம் அடைந்த பெற்றோா் காதல் ஜோடிகளை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனா். காதல் ஜோடிகள், அவா்களின் பெற்றோா்களால் காவல் நிலையங்கள் நிரம்பி திருமண மண்டபங்கள் போன்று காட்சியளித்தன.