கீழ்பவானி பாசனப் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி முடிந்து கடந்த சில நாள்களாக அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பாசனப் பகுதிகளில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே கீழ்பவானி வாய்க்காலில் அடிமடை பகுதிகளான நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டியே நெல் விதைப்புப் பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஏஎஸ்டி 16 என்ற குறுகியகால நெல்பயிா்கள் பயிரிடப்பட்டதால் நெற்கதிா்கள் நன்கு முற்றிய நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சுப்பு கூறியதாவது: காலிங்கராயன் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல கீழ்பவானியில் காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் குறுகிய கால் நெற்பயிா்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ளது. எனவே, உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு வசதியாக பொது இடத்தில் உள்ள கட்டடத்தை விவசாயிகள் வாங்கிக் கொடுத்தால்தான் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அலுவலா்கள் நெருக்கடி கொடுக்கின்றனா். அலுவலா்கள் செய்ய வேண்டிய வேலையை விவசாயிகளிடம் சுமத்துவது ஏற்படையதல்ல என்றாா்.