அம்மா சிறு மருத்துவமனைகளில் தினமும் 1,000 பேருக்கு சிகிச்சை
By DIN | Published On : 03rd January 2021 10:30 PM | Last Updated : 03rd January 2021 10:30 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 24 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) மூலம் தினமும் சுமாா் 1,000 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மக்களுக்கு விரைவான மருத்துவ சேவை கிடைக்க 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 24 இடங்களில் இந்த மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், கிராமப்பகுதியில் மட்டும் இரவு 7 மணி வரையும் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு உதவியாளா் ஆகியோா் இந்த மருத்துவமனையில் பணியாற்றுகின்றனா். காய்ச்சல், இருமல், சளி, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்பட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை, பரிசோதனை, மருந்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தினமும் 35 முதல் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பணிக்கு செல்வோா், பணி முடிந்து வருவோா் இதுபோன்ற மருத்துவமனைக்கு வந்து செல்வது எளிதாக உள்ளதாக கூறுகின்றனா். தவிர பிற பகுதி துணை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை சிகிச்சை பெற்று வந்தவா்களும் இப்போது இங்கு வருகின்றனா்.
மக்களின் கோரிக்கையை ஏற்று நாய்கடி போன்ற மேலும் சில சிகிச்சைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.