சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி
By DIN | Published On : 01st July 2021 05:09 PM | Last Updated : 01st July 2021 05:09 PM | அ+அ அ- |

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி.
சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
வனவிலங்குகள் சாலையை கடக்கும் இடங்களில் சிறுத்தை நடமாட்டம் மற்றும் யானை நடமாட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சாலையின் நடுவே சிறுத்தை அடிபட்டு இறந்து கிடப்பதாக தலமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அதிகாலையில் சிறுத்தை மீது மோதி உயிரிழப்பு ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.