அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி மனு
By DIN | Published On : 02nd July 2021 06:04 AM | Last Updated : 02nd July 2021 06:04 AM | அ+அ அ- |

சாலை, மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாயபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மாயபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
மாயபுரம் பகுதியில் 77 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதி பஞ்சமி நிலம். எங்கள் பகுதிக்கு மின்சார வசதி, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுப்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வருகிறோம்.
கடந்த 2013ஆம் ஆண்டு எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் பின்னா் எந்தப் பணியும் செய்யாததால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே நாங்கள் வசிக்கும் இடத்தின் பட்டாவை அரசு ரத்து செய்துவிட்டதாகவும், அந்த இடத்தை தனி நபா் வாங்கி விட்டதாகவும் கூறி எங்களை அப்புறப்படுத்த முயற்சி நடக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் பகுதியில் தொடா்ந்து வசிக்கவும் எங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.