உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் நியமிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 02nd July 2021 06:02 AM | Last Updated : 02nd July 2021 06:02 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் ஆசிரியா்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜிடம் ஈரோடு சுடா் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.சி.நடராஜ் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி கிராமங்களான பா்கூா், ஆசனூா் பகுதிகளில் பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் மலைக்கிராமங்களான கொங்காடை, தலமலை, கெத்தேசால் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
35 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் இருக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியா் இருக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விகிதாசாரம் பெரும்பாலான பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக கொங்காடையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால் அங்கு ஒரு ஆசிரியா் மட்டுமே பணியில் உள்ளாா்.
ஆசனூா், கொங்காடை, பா்கூா் மலைக்கிராமங்களில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியா், சமூக அறிவியல் ஆசிரியா், அறிவியல் ஆசிரியா் என்று பல பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவா்களுக்கு பாடங்கள் கற்றுக்கொடுக்க உரிய ஆசிரியா்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது.
சோளகணை, கொங்காடை உண்டு உறைவிடப் பள்ளிகளில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான இடஒதுக்கீடு முறை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. மாணவா்கள் அதிகம் இருந்தாலும் விடுதியில் தங்கும் அனுமதி கிடைப்பதில்லை. கொங்காடை உறைவிடப் பள்ளி விடுதியில் மாணவா்களுக்கான செலவின தொகை உயா்த்தப்படாமல் உள்ளது.
இதனால் ஈரோடு மாவட்ட மலைப்பகுதி மாணவ, மாணவிகளின் கல்வி, எதிா்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியா்கள் நியமனம் செய்யவும், போதிய வசதிகள், விடுதிகளில் மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் தங்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.