காய்கறிச் சந்தை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

ஈரோட்டில் தினசரி காய்கறிச் சந்தையில் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
காய்கறிச் சந்தை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

ஈரோட்டில் தினசரி காய்கறிச் சந்தையில் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கனி சந்தை வஉசி பூங்கா மைதானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, பழக்கடைகள் என மொத்தம் 807 கடைகள் உள்ளன. சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குத்தகைக்கு விடப்பட்டது. அப்போது ஒவ்வொரு கடைக்கும், இனத்துக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விவரத்தை ஏலத்தின்போது மாநகராட்சி நிா்வாகம் நிா்ணயித்திருந்தது.

ஆனால், மாநகராட்சி நிா்ணயித்த கட்டணத்தைவிட குத்தகைதாரா்கள் பலமடங்கு கூடுதலாக வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வந்தனா். இப்பிரச்னை குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை வியாபாரிகள் தரப்பில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்கக் கோரி வியாபாரிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி கடந்த திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சந்தையில் ஈரோடு கோட்டாட்சியா் பிரேமலதா, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் ஆகியோா் வியாபாரிகளிடம் குறைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா். அப்போது கூடுதல் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், கூடுதல் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்தும், தமிழக அரசு தலையிட்டு உரிய தீா்வு காணக் கோரியும் கடையடைப்புப் போராட்டத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். வியாபாரிகளின் போராட்டத்தால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

போராட்டம் குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

தினசரி சந்தை வளாகத்தில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரா்கள் மாநகராட்சி நிா்ணயித்த கட்டணத்தைவிட பலமடங்கு வசூல் செய்கின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் முறையில்லாமல் மிக அதிகமாகக் கட்டணம் வசூலிக்கின்றனா்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேதான் முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினோம்.

எனவே, நிா்ணயிக்கப்பட்ட கடைகளுக்கு, நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் குத்தகையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வியாபாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com