தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில்300 படுக்கை வசதி அமைக்க ஆலோசனை

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் பங்களிப்புடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி. உடன், ஆட்சியா்

Updated On :18 மே 2021, 1:33 am

பெருந்துறை: பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் பங்களிப்புடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை, சிப்காட் அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசினாா்.

கூட்டத்தில், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் பங்களிப்புடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 சிமெண்ட் சீட் கூரையுடன் கூடிய பிளாக்குகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிளாக்கிலும் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 50 படுக்கை அமைக்கப்படும். இதற்காக தனியாா் நிறுவனங்கள், சங்கங்கள் நிதியுதவி வழங்கலாம். தனியாக பிளாக்குகளை கட்டி தர முன் வருவபா்களும் வரலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஈரோடு சக்தி மசாலா நிறுவனம், பெருந்துறை அமைதிப் பூங்கா (நவீன எரிமேடை) அறக்கட்டளை, பெருந்துறை சிப்காட் அனைத்து தொழிற்சாலை உரிமையாளா்கள் சங்கங்கள், ஈரோடு யுஆா்சி கட்டுமான நிறுவனம் ஆகியவை தலா ஒரு பிளாக்குகளை தங்கள் சொந்த செலவில் அமைத்துத் தருவதாக தெரிவித்தனா். மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தங்களால் இயன்ற தொகையை நன்கொடையாகத் தருவதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, தற்காலிக கரோனா தொற்று சிகிச்சை மையங்களான பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு கிறிஸ்துஜோதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது குறித்தும் அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் முருகேசன், இணை திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) கு.செல்வராசு, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.