/

சொல்லப் போனால்... நினைப்பும் நிஜமும்... திணறும் தேசிய கட்சிகள்?

கூட்டணியில் கேட்ட தொகுதிகளைப் பெற்ற பிறகும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தேசிய கட்சிகளுக்கு நேரிட்ட தாமதங்கள், குழப்பங்கள் பற்றி...

News image

கனவும் களமும்... செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன்... - சித்திரிப்பு / விஜய்

Updated On :5 ஏப்ரல் 2026, 2:45 am

தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் தொகுதிகளைப் பெறுவதில் தொடங்கி, வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு எனத் தேர்தலில் வெற்றி பெறுவது வரையிலும் திணறிக்கொண்டிருப்பது ஏன்?

இரண்டு கட்சிகளுக்குமான சிறப்பான ஒற்றுமை இரண்டுமே ஏப். 3, கடந்த வெள்ளிக்கிழமை, வேட்பு மனு தாக்கல் செய்ய இரு வேலை நாள்களே மீதமிருக்கும் நிலையில்தான், வேட்பாளர்கள் பட்டியலையே அறிவித்தன. அனேகமாக இவர்கள் அனைவரும் கடைசி நாளில்தான் மனு தாக்கல் செய்வார்கள்..

ஆனால், திமுக, அதிமுகவிடமிருந்து கூடுதலான தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் இரு கட்சிகளுமே ஒரேமாதிரியாக முனைப்பாக இருந்தன. ஒப்பீட்டளவில் மத்தியில் அதிகாரத்தில் இருப்பதாலோ என்னவோ, பாரதிய ஜனதா சற்று எளிதாகவே கூடுதல் தொகுதிகளைப் பெற்றுவிட்டது. ஆனால், காங்கிரஸால் சகல விதமான உத்திகளையும் பயன்படுத்திதான் கூடுதல் தொகுதிகளைப் பெற முடிந்தது. இரண்டுக்குமே வேட்பாளர்கள் தேர்வில் என்ன பிரச்சினையோ, பட்டியல் தாமதமாகிக் கொண்டே போனது.

கூடுதல் தொகுதிகளைப் பெற்றாலும், எதிர்த்துப் போட்டியிடும் கட்சி அல்லது வேட்பாளர் உள்பட பல்வேறு காரணங்களால், வெற்றியே பெற முடியாத சில தொகுதிகளை இரு கழகங்களும் தங்களுக்கு ஒதுக்கிவிட்டன என்று இரு தேசிய கட்சித் தொண்டர்களிடமும் முணுமுணுப்பு இருக்கத்தான் செய்கிறது. வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் இதே முணுமுணுப்பு இந்தக் கூட்டணிகளிலுள்ள வேறு சில கட்சிகளுக்கும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

காங்கிரஸில் எங்கெங்கே கட்சி பலமாக இருக்கிறது என்பதில் தொடங்கி, எந்தெந்தத் தொகுதிகளைக் கேட்பது, எந்தெந்தத் தொகுதிகளில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, எந்தத் தொகுதிகளில் எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு என்று எல்லாவற்றிலும் கட்சிக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள், கோஷ்டிப் பூசல்கள், எங்கேயும் எப்போதும் ஒருமித்த கருத்து எட்டப்படுவதேயில்லை.

காங்கிரஸுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது 28 தொகுதிகள்தான். இவற்றிலேயே சில தொகுதிகளுக்குப் பொருத்தமான வேட்பாளர்கள் கிடைக்கவில்லையாம். திமுகவிடம் தாங்கள் அளித்த விருப்பப் பட்டியலில் இடம் பெறாத 14 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் காங்கிரஸ் வசமிருப்பவை. ஆனால், பட்டியலில் உதகை, மயிலாடுதுறையைக் கேட்கவேயில்லையாம். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவும் விரும்பவில்லையாம் (இரண்டிலுமே இப்போது புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்). மீதி 12 தொகுதிகளில் போதுமான விருப்ப மனுக்கள் வரவில்லையாம். ஒதுக்கப்பட்ட தொகுதிகளைப் பற்றித் தனியார் அமைப்புகள் மூலம் சர்வே மேற்கொண்டபோது, மேலூர், உசிலம்பட்டி போன்றவை பற்றிய தகவல்களும் சாதகமாக இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

தேர்தலில் 18 தொகுதிகளில் அதிமுகவுடன் காங்கிரஸ் மோதுவதாக இருக்கிறது. ஓர் எடுத்துக்காட்டாக சிவகாசியைக் கொண்டால், தேர்தல் வேலையைத் தொடங்கி, மாதக்கணக்கில் மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. காங்கிரஸில் இப்போதுதான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இனிமேல்தான் முழுமூச்சாகத் தேர்தல் வேலை பார்க்க வேண்டும். காங்கிரஸில் யார் வேட்பாளர் என்று தெரியாத வரைக்கும் (கடைசி வரை நிச்சயமில்லாத நிலையில்) யாருக்காக, யார் தேர்தல் வேலையைச் செய்திருப்பார்கள்?  

இதற்கே இவ்வளவு திணறுகிறார்களே. சும்மா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், காங்கிரஸ் துணிச்சலாகப் பெருமளவில் போட்டியிட்டாலோ அல்லது அவர்களில் கட்சித் தலைமையின் ஆசிபெற்ற ஒரு கோஷ்டியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து 100 (!) தொகுதிகளில் போட்டியிடும் அதிர்ஷ்டம் கிட்டியிருந்தாலோ, தொகுதிகளுக்கு வேட்பாளர்களை எவ்வாறு தெரிவு செய்வார்கள்? எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வார்கள்? யார் யாரெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள்? எப்போது முடிவு செய்வார்கள்? (234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் என்று யோசிப்பதெல்லாம் ரொம்பவும் ஓவராக இருக்கும்!).

ஏழு, எட்டு ஆண்டுகளாகத் தொடரும் வலுவான கூட்டணி என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் - கட்சித் தலைவர்களும்  நம்பிக்கொண்டிருந்த நிலையில், திடீரென காங்கிரஸில் சில தலைவர்கள், ‘அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு’ என்று அறிக்கை விட்டுப் பேட்டியளிக்கவும் தொடங்கினார்கள். இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது தவெக என்று வெளிப்படையாக  ‘மிரட்ட’வும் செய்தார்கள். ஆனால், கட்சியின் மேலிடம் என்னவோ இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. எல்லாரையும் பேச விட்டது. கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படுமே என்பது பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. பொதுவெளியில் அனைவரும் சகட்டுமேனிக்குக் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருந்தனர். ராகுல் காந்தியும் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால், திடீரென கூட்டணி முடிவானது. மார்ச் 4 ஆம் தேதியே, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னர், உடன்பாட்டில் கையொப்பமிட்டனர்.

மார்ச் 28-ல் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால், வேட்பாளர்களைக் கண்டுபிடித்து முடிவு செய்வதற்கு ஒரு வாரமாகிவிட்டது. அதற்குள்ளே, கட்சியில் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாய்ப்புத் தருகிறார்கள் என்றெல்லாம் பொதுவெளியில் காங்கிரஸ்காரர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனிடையே, மாநில தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரே பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுவிட்டார் (ஜனநாயகத்தின் இலக்கணமாக!).

ஆனாலும், அப்படியே விட்டுவிடவில்லை. பட்டியல் வெளியானதும், ‘மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பு. அனைவரின் கருத்துகளைக் கேட்டு கட்சித் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அன்போடு ஏற்று, அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றோர் அறிக்கையையும் வெளியிட்டார் மாணிக்கம் தாகூர்.

வழக்கம்போல, கரூர் எம்.பி.யான ஜோதிமணியும் உடனே பொதுவெளியில் வேதனை தெரிவித்து, கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்துக்கு வாய்ப்பு தரப்படவில்லை... இரு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது. ... இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை. இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பற்றி ராகுல் காந்தி முன்னிலையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஒருவர் கூறுகிறார். ராகுல் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று இன்னொருவர் கூறுகிறார். என்ன, இருவருமே திமுக கூட்டணியில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான்.

கட்சியில் சேர்ந்த 5 நாள்களில் ஒருவருக்குப் போட்டியிட வாய்ப்பு, திருப்பூர்க்காரருக்கு ஈரோடு கிழக்கில் வாய்ப்பா? முடியாது, முடியாது என்றெல்லாமும் காங்கிரஸுக்குள் ஒரே புகைச்சல்கள். இவ்வளவுக்குப் பிறகும் ஒரு தொகுதிக்கு - மேலூருக்கு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை, இரண்டு எம்.பி.க்கள் மோதிக் கொண்டிருக்கிறார்களாம்!

இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கும் இன்னொரு தேசிய கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஓராண்டுக்கும் முன்னதாகவே அதிமுக – பா.ஜ.க. கூட்டணி உருவாக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தும் சென்றுவிட்டார். மார்ச் 25 ஆம் தேதியே பாரதிய ஜனதா போட்டியிடும் தொகுதிகளையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஆனால், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதற்கென்னவோ காங்கிரஸைவிட கூடுதலாக காலம் எடுத்துக் கொண்டனர். கூட்டணியை அறிவித்த - தொகுதிகளைப் பேசிப் பெற்ற இவர்களின் வேகம் வேட்பாளர்களை அறிவிப்பதில் சுணங்கிவிட்டது.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவரான அண்ணாமலை தேர்தலில்  போட்டியிட மாட்டார் என்றார்கள், போட்டியிடுவார் என்றார்கள். ஒரே குழப்பம். பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியல் வெளியானபோது, அண்ணாமலை போட்டியிடக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளே இடம் பெறவில்லை.

ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் தொடர்ந்து கொண்டிருக்க, அண்ணாமலை போட்டியிட விரும்புகிறார், அவருடைய ஆதரவாளர்களுக்குத் தொகுதி கேட்கிறார் என்றெல்லாமும், அரவக்குறிச்சி அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிடுமாறு தலைமை கேட்டுக் கொண்டதாம், (வானதி சீனிவாசன் போட்டியிடும்) கோவை வடக்கேதான் வேண்டும் என்கிறாராம் அண்ணாமலை என்றும் ஒரே பரபரப்பு. இவற்றிலெல்லாம் எவ்வளவு உண்மை, எவ்வளவு வதந்தி அல்லது திட்டமிட்டுப் பரபரப்பட்ட செய்தி? யாருக்கும் தெரியவர வாய்ப்பில்லை.

காங்கிரஸில்தானே கோஷ்டிகள் கட்டி உருளுவார்கள், பாரதிய ஜனதா கட்சியிலுமா? ஆனால், நிலைமை என்னவோ அப்படித்தான் இருக்கும் போல.

ஆனால், காங்கிரஸைப் போல பொது வெளியில் வெளிப்படையாக யாரும் கட்சிக்கோ, கூட்டணிக்கோ எதிராக அதிருப்தியான கருத்துகளைத் தெரிவிக்கவில்லை - அண்ணாமலை மட்டுமின்றி அவருடைய ஆதரவாளர்கள் எனக் கூறப்படுவோரின் பெயர்களும் இடம் பெறாத வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகும். வேட்பாளர் தெரிவில் அண்ணாமலைக்கு எதிராக அனைத்துத் தலைவர்களும் இணைந்துகொண்டதாகவும் கூறப்(த்தான்)படுகிறது.

திட்டமிட்டோ, திட்டமிடாமலோ பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸைப் போலவே, 18 தொகுதிகளில் திமுகவை எதிர்கொள்கிறது; அமைச்சர்கள் எ.வ. வேலு, பெரியகருப்பன், ஆவடி நாசர், அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன், பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோரெல்லாம் எதிர்த்து நிற்போர்.

அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக ஏற்கெனவே, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடி வந்து பிரசாரம் செய்திருக்கிறார். தேர்தல் நெருக்கத்தில் இன்னமும் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழ்நாட்டுக்கு அவர் வரலாம், பிரசாரம் செய்யலாம். ஆனால், இதுவரை வராத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இனிமேலும் எப்போது வரப் போகிறார் என்பதைப் பற்றி இன்னமும் உறுதியான எவ்விதத் தகவலும் இல்லை.

 திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி ஊர் ஊராகச் சென்றுகொண்டிருக்கிறார்; கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திப் பேசியதுடன், கூடவே பெயர் தெரியாத காங்கிரஸ் வேட்பாளருக்காகவும் வாக்குக் கேட்டார்.

திருச்சியில் பேசும்போது, ‘துறையூர் சட்டமன்றத் தொகுதியை நம்முடைய தோழமை இயக்கமான காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒதுக்கியிருக்கிறோம். விரைவிலே நம்முடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் அறிவிக்க இருக்கக் கூடிய வேட்பாளரை, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்துத்  துறையூர் மக்கள் கைச்சின்னத்தில் தங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.

திருச்சி மட்டுமல்ல, ஈரோடு, கோவை பிரசார கூட்டங்களில் பேசும்போதும் இதே வரிகளைக் கொஞ்சம் முன்பின்னாகப் பேசி ‘அறிவிக்கப்படாத’ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் ஸ்டாலின்.

இந்தக் கூட்டங்களில் மட்டுமல்ல திமுகவின் பிற தலைவர்கள் பங்கேற்றவற்றிலும் கவனிக்கப்பட வேண்டிய இரு விஷயங்கள் – கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடிகள் குறிப்பிடும்படியாகக் காணப்படவில்லை! யார் கட்டுவது என்று நினைத்தார்களோ அல்லது எதற்காக கட்டுவது என நினைத்தார்களோ?

இரண்டாவது மிக முக்கியம் – ஸ்டாலின் பேசிய ஒவ்வொரு கூட்டத்திலும் வேட்பாளரைச் சொல்லும்போது, ‘அன்புச் சகோதரர் ராகுல் காந்தி’ என்றே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார் (எப்போதும் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும்போது சகோதரர் என்று குறிப்பிடுகிற ராகுல் காந்தி, இந்த ஆண்டு அதிகத் தொகுதிகள், ஆட்சியில் பங்கு களேபரத்துக்கு நடுவே வெறுமனே தமிழ்நாடு முதல்வர் என்று கூறி விட்டுவிட்டார்).

அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி ஊர் ஊராகச் சென்றுகொண்டிருக்க, அவரும் பாஜகவின் அறிவிக்கப்படாத வேட்பாளர்களுக்கும் சேர்த்துதான் வாக்குக் கேட்டார்.

ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிந்து, 23 ஆம் தேதி வாக்குப் பதிவு. காங்கிரஸ், பாரதிய ஜனதா வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ததும் விறுவிறுப்பான பிரசாரம் தொடங்குவார்கள், மீதியிருப்பது மொத்தம் 16 நாள்கள். இவர்களில் எத்தனை பேர் தங்கள் தொகுதிகளை (திமுக, அதிமுகவினர் போல) ஏற்கெனவே தயார் செய்து வைத்திருப்பார்கள்? எத்தனை பேர் தொகுதியில் இனிமேல் போய் (ஈரோடு கிழக்கு மாதிரி) அறிமுகமாகப் போகிறார்கள்?

தங்கள் உண்மையான பலம் என்ன? என்பது நிச்சயம் இந்தக் கட்சிகளின் மாநில / உள்ளூர்த் தலைவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இவ்விரு கட்சிகளுக்கும் கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27, 28 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெறுவார்கள்? வெற்றி பெற்ற பிறகு இவர்கள் எந்த அளவுக்குத் தங்களுக்கு உதவியாக அல்லது உபத்திரவமாக இருப்பார்கள் என்பது பற்றி திமுக, அதிமுக இரு தரப்பினரிடையேயும் ‘த்ரில்லான’ ஒரு சஸ்பென்ஸ் இருப்பதென்னவோ வெளிப்படை.

ரிமோட் மூலம் தொலைக்காட்சியை இயக்கலாம், குளிர்சாதனத்தையும்  இயக்கலாம், வெடிகுண்டைக்கூட இயக்கலாம், ஆனால், கட்சிகளின் மாநிலப் பிரிவுகளையே இயக்குவதென்றால்... அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் காத்திராமல் தேசிய கட்சிகள் சுய பரிசோதனை செய்துகொள்ளலாம் – மனமிருந்தால்! 

Summary

Thoughts and reality... National parties struggling in Tamil Nadu assembly election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.