
நோ கன்ஃப்யூசன்!
TVKVijay

நோ கன்ஃப்யூசன்!
TVKVijay
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டதா? நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனித்துதான் போட்டியிடப் போகிறதா?
இருக்கிற அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்க, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளான ஏப். 9 வரையும்கூட பேசிக்கொண்டே இருப்பார்கள் போல. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது.
மாமல்லபுரத்தில் த.வெ.க. சார்பில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், ‘கூட்டணியா? யார் சொன்னது? தனித்துதான் போட்டி’ என்று அறிவித்திருக்கிறார்.
“நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அந்த டீம், இந்த டீம் என்று சொல்கிறார்கள்.
“ஆனால், நாங்கள் எந்த டீமும் இல்லை, மக்கள் டீம் என்று எல்லாருக்கும் தெரிந்த பிறகு என் மீதும் எங்கள் கட்சியினர் மீதும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என நினைத்தார்கள்.
“எனவே, கடைசியாக, விஜய் அந்தக் கூட்டணியில் சேரப் போகிறார், இந்தக் கூட்டணியில் சேரப் போகிறார் என்று பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்தார்கள்.
“இந்தச் செய்திகளைக் கேட்டுத் தொண்டர்கள் மற்றும் மக்களாகிய நீங்கள் எல்லாம் குழப்பமடைந்திருப்பீர்கள். நான் இங்கே இப்போது தெளிவாக ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறேன்.
“நான், நாங்கள் மதச்சார்பற்ற கொள்கை நிலைப்பாட்டிலும் மதச்சார்பற்ற சமூக நீதி என்ற நிலையிலும் எப்போதுமே சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
“முதல் மாநாட்டில் கூறியது போல, நம் தலைமையில்தான் ஆட்சி என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். எனவே, அதில் எந்த சமரசமும் இல்லை. மற்ற யார் தலைமையிலும் செல்ல, எந்தக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தையும் இல்லை. கூட்டணி தொடர்பாக யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நம் இலக்கை நம்மால் அடைய முடியும்.”
விஜய்யின் இந்த அறிவிப்பின் மூலம் நிலைமை தெளிவாகிவிட்டதாகத்தான் நம்பப்படுகிறது.
இந்தக் குழப்பம், அவதூறுகளுக்கெல்லாம் இவரும் இவர்களுடைய கட்சிக்காரர்களுமேகூட ஏதோவொரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. முதல் மாநில மாநாட்டில் பேசும்போதே, ‘கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என்றுதான் நடிகர் விஜய் அறிவித்தார். என்றால் கூட்டணி அமைக்கக் கட்சிகளை வரவேற்கிறோம்; கதவுகள் திறந்திருக்கின்றன என்றுதானே பொருள்?
கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் பிரகடனம் செய்த விஜய், கரூர் நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவத்துக்குப் பிறகு பாரதிய ஜனதாவை நேரடியாக (மறைமுகமாகக்கூட பெரிதாக இல்லை) தாக்கிப் பேசுவதை அறவே நிறுத்திக் கொண்டுவிட்டார் எனலாம்.
சில வாரங்களுக்கு முன்னர் வரையிலும்கூட அதிமுகவும் பாரதிய ஜனதாவும் கொஞ்சம் ‘செல்லமாகவே’தான் விஜய்யை அணுகி வந்தனர். கரூர்ப் பலியின்போதுகூட, ‘அடடா, பாவம். அவர் என்னங்க செய்வார்?’ என்ற தொனியில்தான் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே தொலைபேசியில் விஜய்யுடன் பேசியதாகவும் செய்திகள் வெளியானது. தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, திடீரென விஜய்யுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூட்டணிக்காகப் பேச்சு என்று தகவல்கள் புறப்பட்டன. கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் சந்தித்துப் பேசியதாகவே செய்திகள் வெளியாகின.
த.வெ.க. கூட்டணிக்குத் தயாராகிக் காத்திருப்பதைப் போல காங்கிரஸின் தலைவர்கள் சிலரும் கருத்துகளைத் தெரிவித்ததுடன், ‘குறைவான தொகுதிகளை ஏற்க முடியாது; இன்னொரு கட்சி காத்துக் கொண்டிருக்கிறது’ என்று திமுகவை எச்சரிக்கத் தொடங்கினர்.
சென்சார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருந்த விஜய்யின் ஜனநாயகன் பட வெளியீட்டுக்காக மத்திய அரசைக் கண்டித்து ராகுல் காந்தியே ட்வீட் செய்தார்! கூடவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளுக்குப் போகட்டும் விடு என்கிற மாதிரி வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்தில் காங்கிரஸ் – தவெக கூட்டணி பேசி முடிக்கப்பட்டு விட்டது என்கிற வரையில் ‘வதந்தீ’ பரவியது. ஆனால், திடீரென திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதும் எல்லாம் பொசுக்கென அடங்கிவிட்டன. காங்கிரசுக்கு 3 தொகுதிகள் லாபம்!
அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தவெகவும் சேரும் என்ற செய்தி, திட்டமிட்டோ, திட்டமிடப்படாமலோ பரவியது அல்லது பரப்பப்பட்டது, தில்லியில் பாஜக தலைமையுடன் பேச்சுகள் நடப்பதாகவும் அதற்கான காரண, காரிய விளக்கங்களுடனும்.
இதனிடையே, 13 ஆம் தேதி காணொலி வாயிலாக த.வெ.க. மாவட்ட செயலர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 132 மாவட்டங்களின் செயலர்கள் பங்கேற்றனர். பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார். பிற்பகலில் 2 மணி நேரம் கூட்டம் நடந்ததாகவும் கூட்டணி அழைப்புகளை ஏற்றுக் கூட்டணிக்குச் செல்லலாமா? என்று விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. கூட்டத்தில் 95 மாவட்ட செயலர்கள் கூட்டணி சேர ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், ‘கூட்டணிக்கு ஆதரவாகப் பேசப்பட்டது. யாருடன் என்பது பற்றி எதுவுமில்லை. பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி பற்றிக் கூறப்படவுமில்லை; ஆனால், ஊடகங்களில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று தகவல் பரவின’ என்று கூட்டத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான், பாரதிய ஜனதா, அதிமுக, சசிகலா, ராமதாஸ் ஆகியோரைத் தொடர்புபடுத்திக் கூட்டணிப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று எல்லாவற்றையும் மறுத்து விலாவாரியாகக் கட்சியின் இணைப் பொதுச் செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஒரு பதிவை வெளியிட்டார்.
ஆனால், அடுத்த நாளே சென்னையில் கொளத்தூர் தொகுதி பெரம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைச் செயலர் ஆதவ் அர்ஜுனா, 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் காண்கிறோம். ‘நீங்கள் 90, நாங்கள் 90, நீங்கள் இரண்டரை ஆண்டுகள் முதல்வர், நாங்கள் இரண்டரை ஆண்டுகள் முதல்வர்’ என்று விஜய்க்கு நிறைய சலுகைகள் கொடுத்தார்கள். ஆனால், நான் மதச்சார்பற்ற சமூக நீதி அரசியலை உருவாக்குவேன் என்று விஜய் சொல்லிவிட்டார். 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்துள்ளார் என்று அறிவித்தார்.
‘90, 90, இரண்டரை, இரண்டரை’ என்று யார் பேசினார்கள், யாருடன் பேசினார்கள் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவிக்கவில்லை. பேசினார்கள் என்பதுடன் நிறுத்திக் கொண்டார்.
இத்தகைய சூழலில்தான், மறுநாள் கட்சித் தலைவர் விஜய்யே நேரடியாக இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு வந்து, பொய்யான பிரசாரத்தைப் புறந்தள்ளுங்கள், தனித்துதான் போட்டி என்று அறிவித்திருக்கிறார்; நம்புவோம்.
சரி, இந்தத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டிதான். அதிமுக தலைமையில் ஓரணி (144 தொகுதிகளில் வெற்றி - ஆட்சி), திமுக தலைமையில் ஓரணி (48), இந்திரா காங்கிரஸ் தலைமையில் இன்னோர் அணி (32), ஜனதா கட்சி தனி (10).
1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவியது. முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவு காரணமாக அதிமுக இரண்டாக உடையவே, இரட்டை இலை முடங்கி, அதிமுக, ஜெயலலிதா அணியென்று சேவல் சின்னத்திலும் (27), ஜானகி அணியென புறா சின்னத்திலும் (2) போட்டியிட்டன. திமுக (150 தொகுதிகளில் வெற்றி - ஆட்சி), காங்கிரஸ் (26) இரண்டும் தனித்தனியே போட்டியிட்டன.
2014 மக்களவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி. அதிமுக (37 வெற்றி), திமுக மற்றும் பாரதிய ஜனதா (1), தேமுதிக, பாமக (1), மதிமுக ஆகியவற்றைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் எனப் போட்டியிட்டன.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக (134), திமுக – காங்கிரஸ் (98), மக்கள் நலக் கூட்டணி, ஐ.ஜே.கே.யுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவும் பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி (எல்லாம் 0) ஆகியவை தனித்தும் (4 அணிகள், 3 தனிகள்) போட்டியிட்டன.
நான்கு முனைப் போட்டி ஏற்பட்ட போதெல்லாம் ஏதேனும் இரு அணிகள்தான் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. மீதி இரண்டும் பெரிதாக சோபிக்கவில்லை என்பதுதான் வரலாறு.
தேர்தல் முடிவுகள் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், தங்கள் தலைவர் சொன்ன பிறகாவது தவெகவினர் இனிமேலும் குழப்பாமல் இருக்க வேண்டும். ஏனெனில், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 ஆம் தேதிதான் கடைசி. அதுவரை பேசிக்கொண்டே இருக்கலாம் அல்லவா? லைவ்வாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...