5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி?

பெரும்பான்மை இல்லாமல் தவெக தலைவர் விஜய் முதல்வராவது எப்படி?

News image

விஜய் - ANI

Updated On :4 மே 2026, 8:17 pm IST

தமிழக வெற்றிக் கழகம் 105 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 235 தொகுதிகளில் அதிகபட்சமாக தவெக 107 தொகுதிகளில் (தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இரவு 7.30 மணி நிலவரம், 62 வெற்றி + 45 முன்னிலை) முன்னிலை / வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் திமுக கூட்டணி 70+ தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான அதிமுக 50+ தொகுதிகளிலும் முன்னிலை / வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், காலை முதலே ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கையை தவெக பெறவில்லை. 105-ல் இருந்து 110 தொகுதிகள் வரையிலேயே முன்னிலை பின்னடைவை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைத்து விஜய் முதல்வராகப் பதவியேற்க இன்னும் 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் அனைத்து சுற்றுகள் நிறைவடைந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கை தவெகவுக்கு கிடைக்காது என்ற நிலையே உள்ளது.

விஜய் முதல்வராவது எப்படி?

தற்போதைய நிலவரப்படி, விஜய்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதிக தொகுதிகளில் வென்ற தனிக் கட்சி என்ற அடிப்படையில் விஜய்யை ஆட்சி அமைக்க தமிழ்நாடு ஆளுநர் ஓரிரு நாள்களில் அழைப்பார்.

இல்லையெனில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் விஜய் கடிதம் அளிக்கலாம்.

அதன்படி, தவெக கட்சி சார்பில் வழங்கப்படும் அமைச்சரவைக்கு தமிழ்நாடு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட காலஅவகாசம் அளிக்கப்படும். அதற்குள் பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 15 எம்.எல்.ஏ.க்கள் வரை தேவைப்படும் நிலையில், மூன்றாவது இடத்தில் உள்ள அதிமுக அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2006 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்குபெறாமல் திமுக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.

இதுபோன்று திமுகவுக்கு எதிராக விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து அதிமுக ஆதரவு கொடுக்கலாம்.

மேலும், மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களின் 33 சதவிகிதம் பேர் கட்சி மாறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை கோர முடியாது என்பதால் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க விரும்பும் அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் குழுவின் ஒரு பகுதி தவெகவில் இணைந்தால் எளிதில் ஆட்சி அமைத்துவிட முடியும்.

இதுதவிர, திமுக அல்லது அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து குறைந்த தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் (5), பாமக (5), இடதுசாரிகள் (4), விசிக (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்க முடியும்.

தவெக தொடங்கும் போதே தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸும் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆட்சியில் பங்கு கோரி நீண்ட போராட்டம் நடத்தி தோல்வியடைந்தது. மாநிலங்களவை இடம், கூடுதல் தொகுதிகள் ஆகியவற்றில் சமரசம் செய்துகொண்டு திமுக கூட்டணியில் மீண்டும் தேர்தலை சந்தித்தது.

இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாகதான் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய அவர் முனைப்பு காட்டவில்லை என்றும், இறுதி நாள்களில் பிரசாரத்துக்கு வந்தபோதும் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தவெக வெற்றி பெற்றவுடன் முதல் ஆளாக தொலைப்பேசியில் அழைத்து ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆகையால், தவெக அமைச்சரவையில் இணைந்து காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

No Majority! How Can Vijay Become Chief Minister?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.