முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தனிக் கட்சி தொடங்கி பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு தேர்தல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலைத்திருக்கும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தினமணி நாளிதழுக்கு அளித்த நேர்காணல்:
28 கட்சிகளுடன் திமுக பலமான கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், அதை அதிமுகவின் தேசிய ஜனநாயக் கூட்டணியால் எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?
திமுக கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. திமுகவை தவிர ஏனைய கட்சிகள் எல்லாமே 1% வாக்குகள்கூட இல்லாத லெட்டர் பேட் கட்சிகள். அறிவாலயம் வழியாக வருவோர், போவோரை எல்லாம் கூட்டணியில் இணைத்துக்கொண்டு வலிமையான பிம்பத்தைக் கட்டமைக்க திமுக முயற்சிக்கிறது. வாக்கு வங்கி பலமுள்ள வலிமையான கூட்டணி உண்மையில் எங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். அதிமுக கூட்டணிதான் இயற்கையான கூட்டணி.
கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருந்த அமமுக, இந்தத் தேர்தலில் அதே கட்சியுடன் கூட்டணி அமைத்தது எப்படி?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எங்களை அதிமுகவைவிட்டு வெளியேற்றியதால் வருத்தமடைந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்பினார். ஆனால் நடைபெறவில்லை. அதனால், அப்போது அதிமுக ஆட்சி அமையாதது துரதிருஷ்டமானது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது நல்லதல்ல என்பதால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருக்கிறோம். இதை இரு கட்சித் தொண்டர்களும் வரவேற்கிறார்கள்.
உங்களை கூட்டணிக்கு அழைப்பதற்கு அமித் ஷா சொன்ன காரணம்தான் என்ன?
"தீய சக்தியான திமுகவின் குடும்ப ஆட்சியில் தமிழகம் மாட்டிக்கொண்டுள்ளது. மத்திய அரசின் நிதியை தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துகிறது. திமுக ஆட்சி தொடரக் கூடாது என்பதால் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்' என்றார். அதை நாங்களும் உணர்ந்ததால் ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.
அதிமுகவை ஒன்றிணைப்பதாகக் கூறிவந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் ஏன் அதிமுக கூட்டணியில் உங்களால் இணைக்க முடியவில்லை?
அதிமுக கூட்டணிக்கு வருவதாக தில்லியில் அமித் ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இணைவதாக அமித் ஷாவும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் எந்தத் தகவலும் தராமல் திமுகவில் சேர்ந்தது வருத்தமளிக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட ஒருவர் திமுகவில் ஐக்கியமானது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய கட்சி விசுவாசம் சந்தேகத்துக்குள்ளாகி விட்டது. இதற்காக அவர் ஓராண்டாகவே திட்டமிட்டுள்ளார் என்று இப்போதுதான் தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தனித்தனியாகப் போட்டியிடுவதால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாதா?
இவர்களால் எங்கள் கூட்டணிக்குப் பாதிப்பில்லை. ஓபிஎஸ் மீட்புக் குழு நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிட்டனர்.
தமிழகத்தில் நடிகர் விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவாரா?
தவெக தலைமையில் பலமான கூட்டணி அமைந்திருந்தால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கும். அவர் தனியாகப் போட்டியிடுவதால் 2006}இல் நடிகர் விஜயகாந்தைப்போல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஒரு சில தொகுதிகளில் ஐந்து இலக்க வாக்குகள் பெற முடியும். ஏனைய இடங்களில் சில ஆயிரம் வாக்குகளைத்தான் தவெக பெற முடியும் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
விஜய்க்கு இளைஞர்களின் கூட்டம் பெருமளவில் கூடுவதால் யாருடைய வாக்கு வங்கி பாதிக்கும்?
தமிழகத்தில் சட்டம்} ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பில்லை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆளும் திமுக மீது இளைஞர்கள், பெண்கள் அதிருப்தியில் உள்ளனர். நடிகர் விஜய்யின் பரப்புரை, இந்த அதிருப்திக்கு மேலும் வலு சேர்க்குமே தவிர அவருக்கு ஆதரவாகத் திரும்பாது. விஜய் நடிகர் என்பதால் அவருக்குப் பெருமளவில் கூட்டம் கூடுகிறது. அதெல்லாம் வாக்குகளாக மாறாது என்பதை வரலாறு பலமுறை உணர்த்தி இருக்கிறது. சுமார் 10 முதல் 15 சதவீத வாக்குகளை அவர் வாங்கினால் அது திமுகவின் வாக்கு வங்கியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும். திமுகவுக்குதான் விஜய் பாதிப்பை ஏற்படுத்துவார். விஜய்யின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.
போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று விஜய் கூறுகிறாரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அப்படி மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முயற்சிக்கிறார். தமிழகத்தில் எப்போதுமே போட்டி தீயசக்தி திமுகவுக்கும், ஆக்க சக்தியான அதிமுகவுக்கும் இடையேதான். மதிமுக, தேமுதிகபோல இப்போது தவெக அவ்வளவுதான். 2006}இல் விஜயகாந்த் அடைந்த வெற்றியைக்கூட 2026}இல் விஜய் பெற முடியாது.
அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது போதுமானதா?
எங்களிடம் 25}க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் இருந்தார்கள். ஆனால், அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இருந்ததால், கேட்ட தொகுதிகள் கிடைத்தன. கூட்டணி வெற்றிக்காக ஏற்றுக் கொண்டோம். பங்காளி பிரச்னையைப் பேசித் தீர்த்துவிட்டோம். நாங்கள் தனித்துப் போட்டியிட்டதால்தான் கடந்த தேர்தலில் திமுக பலனடைந்தது.
தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆட்சியில் அமமுக இடம்பெறுமா?
அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை உள்ளது. திமுகவுக்கு மாற்றாக அதிமுக கூட்டணியை தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர். மற்ற கட்சிகள் எல்லாம் மூன்றாவது அணிதான்.
நீங்கள் ஏன் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை?
கடந்த 9 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து நாங்கள் பிரிந்து இருந்தோம். மீண்டும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் போட்டியிடவில்லை.
பெண்களுக்கான திட்டங்கள் உள்பட 5 ஆண்டுகள் சாதனைகளை முன்வைத்து திமுக தேர்தல் களம் காண்கிறதே?
2,000 தடுப்பணைகள் கட்டப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் கடைமடைவரை தண்ணீர் சென்றடையவில்லை. மேக்கேதாட்டு அணை கட்ட வேண்டாம் என கர்நாடக அரசிடம் கூறாமல் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். மின் கட்டணம் 67 சதவீதம் உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, நில மதிப்பீட்டு அளவு உயர்வு ஆகியவற்றால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அல்ல, ரூ.10,000 கொடுக்க வேண்டும். பெண்கள் அமைதிப் புரட்சிக்குத் தயாராகிவிட்டனர்.
அதிமுக கூட்டணியில் இணைய மாட்டேன் என நீங்கள் முன்பு கூறியது குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?
காங்கிரஸýக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டது. விஞ்ஞான ஊழல் குற்றச்சாட்டுகளால் திமுக ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. திமுக அமைத்தால் அது கொள்கைக் கூட்டணி; மற்றவர்கள் அமைத்தால் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று அவர்கள் விமர்சிப்பது புதிதொன்றுமல்ல. ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற, அதிமுக முன்னாள் எம்.பி.யான நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது இருக்கட்டும், மாநிலங்களவை சீட்டும், பத்து இடங்களும் அளித்து திமுக கூட்டணியில் தேமுதிகவை மு.க.ஸ்டாலின் இணைத்துக்கொண்டது என்ன வகையான கூட்டணி என்று அவர்கள் விளக்க வேண்டும்.
ஐந்து ஆண்டு திமுக ஆட்சியின் சாதனை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
சாதனை எங்கே இருக்கிறது; வேதனைதான் மிஞ்சுகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் எனப் பொய் வாக்குறுதிகளை அளித்து கடந்த தேர்தலில் வாக்குகளைப் பெற்றார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்த முடியாதவர்கள் பல லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடுகளை நடத்துகிறார்கள். கஜானாவில் பணமில்லை, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று சொன்னவர்கள் ஒரே நாளில் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 வீதம் ரூ.6,500 கோடி வங்கிக்கணக்கில் செலுத்துகிறார்கள். அரசுப் பணத்தை வாரி வழங்கி வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்துவிட்டது.
உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அமையப் போவது அதிமுக ஆட்சியா, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியா?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற அதிமுகவின் ஆட்சி...!
நேர்காணல் - அ. சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடா்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுக, அதிமுக தொண்டா்கள்

தமிழ்நாட்டில் ஏழு முனைப் போட்டியா?

புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

