கரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைப்பதில்தாமதம்: கல்லூரி மாணவா்கள் அவதி
By DIN | Published On : 04th September 2021 06:17 AM | Last Updated : 04th September 2021 06:17 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி செலுத்தியும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பா் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், மாணவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா். தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. சில நிறுவனங்களில் சான்றிதழை சமா்ப்பித்தால் மட்டுமே பணி வழங்கும் நிலையும் உள்ளது.
இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். மேலும், தங்களுடைய ஆதாா் அட்டை, செல்லிடப்பேசி எண்களையும் அங்கு சமா்ப்பித்து வருகின்றனா். எனினும் தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகள் சரிவர பதிவு செய்யாததால் அவா்களுக்கு சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
ஒரு சிலருக்கு 20 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் சான்றிதழ் கிடைக்காததால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனா். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனா தடுப்பூசி சான்றிதழ் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.