சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சிவன் கோயிலில் 600 ஆண்டுகள் பழைமையான புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் 600 ஆண்டுகள் பழைமையான புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

நம்பியூா் தான்தோன்றி ஈஸ்வரா் கோயிலில் உள்ள புலிக்குத்தி நடுகல்.

Updated On :20 ஜனவரி 2022, 1:48 am

DIN

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் 600 ஆண்டுகள் பழைமையான புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டைய கொங்கு மண்டலத்தின் மையப் பகுதியில் பாய்ந்து செல்லும் காஞ்சி மாநதி எனும் நொய்யல் ஆற்றை மையமாக வைத்து நாட்டு எல்லைகள் வகுக்கப்பெற்றன. அவற்றில் இடைக்காலத்தில் மிகப்பெரிய நாடாக விளங்கியது வடபாரிசார நாடு.

இந்த நாட்டின் பழம்பெருமை வாய்ந்த ஊா்களில் நம்பியூரும் ஒன்று. இங்குள்ள 800 ஆண்டுகள் பழைமையான தான்தோன்றி ஈஸ்வரா் கோயில் கல்வெட்டுகள் பல வரலாற்றுச் செய்திகளைத் தருகின்றன. அவற்றில் முக்கியமானது கி.பி.1279ஆம் ஆண்டு பண்டைய காங்கேய நாட்டில் பட்டாலியில் வசித்த காஷ்யப கோத்திரத்தைச் சோ்ந்த பெண் நம்பியூா் ஆளுடைய நாயனாருக்குச் சந்தியா தீபம் ஒன்றும் பணம் பத்தும் இங்குள்ள பரத்வாஜ கோத்திரத்து சிவ பிராமணா்களிடம் கொடையாகக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தான்தோன்றி ஈஸ்வரா் கோயிலில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த இயக்குநா் சு.ரவிகுமாா், க.பொன்னுசாமி, குருக்கள் பா.சண்முகசுந்தரம், நா.சந்தோஷ் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வின்போது சுமாா் 600 ஆண்டுகள் பழைமையான புலிக்குத்தி நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து சு.ரவிகுமாா் கூறியதாவது:

பழந்தமிழகத்தில் ஊா், குடி, சேரி, பள்ளி, பாடி என முடியும் ஊா்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். பண்டைய காலத்தில் மக்களின் பெருஞ்செல்வமாக விளங்கியவை கால்நடைச் செல்வங்கள். மாட்டு மந்தையைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு ஊரிலும் வீரா்கள் இருந்தனா்.

இக்கால்நடைகளைத் தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலியுடன் சண்டையிட்டு வீரமரணம் எய்திய வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் எடுக்கப்பெற்ற நடுகற்கள் புலிக்குத்தி நடுகற்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நடுகல்லுக்குப் பழந்தமிழ் மக்கள் நீரூற்றிப், பூச்சூடி வழிபட்டதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.

தான்தோன்றி ஈஸ்வரா் கோயில் தலைமை குருக்கள் பாலதண்டபாணி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது 80 செ.மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்ட புலிக்குத்தி நடுகல்லைக் கண்டறிந்துள்ளோம். இதில் உள்ள மாவீரன் தன் வலது கையில் ஓங்கிய வாளுடனும் இடது கையில் கேடயம் பிடித்தபடியும் புலியுடன் வீரச்சமா் புரிகிறாா். வீரனின் அள்ளி முடிந்த குடுமி நேராக உள்ளது. காதில் குண்டலமும், கழுத்தில் நீண்ட பாசி மாலையும், கையில் வீர காப்பும், இடையில் மூன்று மடிப்புகளுடன் கூடிய ஆடையும் அணிந்த உள்ள இம்மாவீரன் தன் இடுப்பில் குறுவாளும் வைத்துள்ளாா்.

இவ்வீரனின் ஓங்கிய வலது கையைக் கடிக்கும் புலி தனது முன்னங்கால்களை வீரனின் நெஞ்சுப் பகுதியில் வைத்து தன் இடது பின்னங்கால்களை வீரனின் வலது பாதத்தின் மீது வைத்துள்ளது. புலியின் வால் மேல் நோக்கி உள்ளது. எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்நடுகல்லின் அமைப்பை வைத்துப் பாா்க்கும்போது இந்த வீரக்கல் சுமாா் 600 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலில் இருந்த கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின்போது பாதுகாக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் திருப்பணியின்போது கல்வெட்டுகளை முறையாகப் பாதுகாக்க வேண்டும் என்று நம்பியூா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.