ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிவஞானம் 53 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ச. சிவஞானம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அணைக்கட்டு பகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் சலூன் கடை நடத்தி வருகிறார். ஈரோடு மாநகராட்சி 48- வது வார்டு வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. பகல் 12 மணி அளவில், 23 வாக்குகள் வித்தியாசத்தில் சிவஞானம் வெற்றி பெற்றதாக, பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மதியம் 3 மணியளவில் 48-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சா. தங்கவேல், 53 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இறுதி அறிவிப்பின்படி, 48-வது வார்டில், அதிமுக வேட்பாளர் தங்கவேல், 2119 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிவஞானம் 2066 வாக்குகளும் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழப்பம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமனிடம் கேட்டப்போது, ‘வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மின்னணு இயந்திரத்தை இயக்க முடியவில்லை என தனியாக எடுத்து வைத்துள்ளனர்.
எங்களது கட்சி வேட்பாளர் 23 வாக்குகள் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசியாக அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணியுள்ளனர். இதில், அதிமுக வேட்பாளர் 53 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இயந்திரத்தின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு, எங்களது வேட்பாளர் வெற்றி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டதுதான் குழப்பத்திற்கு காரணம்’ என்றார்.