அரசியல்வாதிகள் கையில் பாசன சங்கங்களை ஒப்படைக்க முயற்சி: விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டு

நீர்ப்பாசன சங்கங்களுக்கு அவசர காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அரசியல்வாதிகளிடம் சங்கங்களை ஒப்படைக்கும் முயற்சியாக கருத வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈரோடு: நீர்ப்பாசன சங்கங்களுக்கு அவசர காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அரசியல்வாதிகளிடம் சங்கங்களை ஒப்படைக்கும் முயற்சியாக கருத வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

வாய்க்கால், ஏரி, குளங்கள் போன்றவற்றின் மூலம் பாசனம் பெறும் விளை நிலங்களின் உடைமைதாரர்களை உள்ளடக்கிய பாசன சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் மற்றும் சுமார் 60 ஏரி, குளங்கள் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள பாசன சங்கங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி தொடங்கி 2 மணியுடன் முடிவடைகிறது.

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெறும் இந்த தேர்தலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தேர்தல் அலுவலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
உரிய முன்னேற்பாடு இல்லை:

எந்த அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் தேர்தல் அறிவிப்புக்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு, தகுதியில்லாதவர்கள் நீக்கப்பட்டு பட்டியல் இறுதிசெய்யப்பட்டு அதன்பிறகு தேர்தல் அறிவிக்கப்படும். ஆனால் இந்த நடைமுறைகள் ஏதும் இந்த தேர்தலில் பின்பற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கோபி சஞ்சீவிராயன் குளம் பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் வழக்குரைஞர் சுபி.தளபதி கூறியதாவது: பாசன சங்கங்களுக்கு அவசர காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சியினருக்கு பதவி அளிக்கவும் அதன் மூலம் பாசன குளங்களில் நடைபெறும் முறைகேடுகளை வெளியில் வரமால் பார்த்துக்கொள்ளவுமே இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வாக்காளர்கள் விவரத்தின் அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலும் விவசாயிகளுக்கு 16 ஆம் தேதி தான் அளிக்கப்பட்டது. ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்ய 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள பலர் நிலங்களை விற்றுவிட்டனர். சிலர் இறந்துவிட்டனர். உண்மையான விவசாயிகள் பலரது பெயர் பட்டியலில் இல்லை.

நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன சங்கங்களுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளை போன்று இதில் பதவிகளை பெற ஆளும்கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர்.

இப்போதுள்ள வாக்காளர் பட்டியலில் 25 சதவீதம் பேர் கூட உண்மையான விவசாயிகள் இல்லை. இதனைக் கவனத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலை முழுமையாக சீரமைத்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ரத்து செய்யப்படவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடிவு செய்யதுள்ளோம் என்றார்.

வாக்காளர் சேர்க்கைக்கு ஏற்பாடு:

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலர்களிடம் பட்டியல் பெறப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல் காரணமாக உடனடியாக தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்களர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையின்படி வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com