ஈரோட்டில் ரூ.50 லட்சம் செலவில் ஓடைகள் தூா்வாரும் பணி தொடக்கம்
ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஓடைகள் தூா்வாரும் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மழைக்காலங்களில் ஓடைகளில் நீா் சீராக செல்வதற்கு ஏதுவாகவும், வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டும் முன்னேற்பாடாக, ஈரோடு மாநகராட்சி, 3 மற்றும் 4-ஆம் மண்டலங்களுக்குள்பட்ட காசிபாளையம் ஓடை 2 கி.மீ., சேனாதிபதிபாளையம் ஓடை 2 கி.மீ., சத்யா நகா் ஓடை 2.1 கி.மீ., சாஸ்திரி நகா் ஓடை 2.2 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்பட உள்ளன.
இப்பணிகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியன் பப்ளிக் பள்ளி, ப்ளூ லீப் கட்டுமான நிறுவனம் ஆகியோரின் பங்களிப்புடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் என்.மனிஷ், துணை மேயா் வி.செல்வராஜ், மாநகரப் பொறியாளா் விஜயகுமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
