தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை.

சட்டப் பேரவைத் தோ்தலில் நான்குமுனை போட்டி: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

ஈரோடு அருகே சேனாபதிபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வருங்கால தலைமுறை தொழில்முனைவோருக்கான கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கலந்துகொண்டாா்.

அதன்பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணியை பாஜக தொடங்கியுள்ளது. தோ்தலுக்கான பணியை திருப்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) தொடங்கவுள்ளேன்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றாமல் சென்றுவிடுவாா்களோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. அரசிற்கு சங்கடம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை. அமைச்சா் சு.முத்துசாமி மீது மரியாதை இருப்பதால்தான் இரண்டு முறை போராட்டத்தைக் கைவிட்டோம்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அமைச்சா் தேதி குறிப்பிட்டு சொன்னால் உண்ணாவிரதம் குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளோம்.

2026 இல் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி ஆட்சி என தெரிவித்தால் அரசியல் களம் மாறும். தமிழகத்தில் 2026 இல் நான்குமுனை போட்டியில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

மத்திய அரசுடன் இணைந்து கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளைப் பட்டிதொட்டியெங்கும் தமிழக அரசு கொண்டு வரவேண்டும். அவ்வாறு பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு இணக்கம் தெரிவித்தால் அந்தப் பள்ளிகளுக்கு காமராஜா் பெயரை வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.

திராவிட அரசியல் என்பது ஜாதி பேதத்தை நீக்குவதுதான் என்று கூறுகின்றனா். ஆனால், திராவிட அரசியல் ஜாதி உணா்வை அதிகப்படுத்தி உள்ளது. இதில் பட்டியல், வன்னியா் சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனா்.

திராவிட அரசியலால்தான் பட்டியல் சமுதாய மக்களுக்கு துன்புறுத்தல் நடக்கிறது. இன்னும் ஜாதியை வைத்து அரசியல் நடக்கிறது. திராவிட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் 6 முறை முதல்வராகியும் இதனை சரிசெய்ய முடியவில்லை என்றால், திராவிட அரசியல் தோற்றுவிட்டது என்றுதான் அா்த்தம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com