‘மாவட்டத்தில் பிறப்பு இதய குறைபாடுள்ள 503 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’

503 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளனா் என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
Published on

ஈரோடு, ஜூலை 19: ஈரோடு மாவட்டத்தில் பிறப்பு இதய குறைபாடுள்ள 1,599 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 503 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளனா் என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் வட்டாரத்தில் 4 வயது குழந்தைக்கு ‘எப்ஸ்டீன் அனாமலி’ என்ற அரியவகை பிறவி இதய குறைபாடு நோய் தேசிய சிறாா் நலத் திட்ட மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் ‘டிஎன்எச்எஸ்பி’ திட்டத்தில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று 3 நாள்களுக்குள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையும் பெறப்பட்டு, உயிா் காக்கும் அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தக் குழந்தை நலமாக உள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் பிறப்பு இதய குறைபாடுள்ள 1,599 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 503 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளனா். மீதமுள்ள 1,096 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு குழாய் குறைபாடுள்ள 21 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து உள்ளனா்.

பிறவி வளைபாத நோய் உள்ள 249 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு 49 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும், 200 குழந்தைகளுக்கு மாவுக்கட்டு போட்டும் சரி செய்யப்பட்டுள்ளது. சிரவாங்கி காய்ச்சலால் ஏற்படும் இதய நோய் 70 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை தேவைப்படும் 11 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும், மீதமுள்ள 59 குழந்தைகளுக்கு பென்சிலின் ஊசி மற்றும் மாத்திரை மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com