பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்வு
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்து வருகிறது.
மேலும், கோவை மாவட்டம் பில்லூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் பில்லூா் அணையில் இருந்து உபரிநீா் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து 14,997 கனஅடியாக இருந்தது. நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 90.57 அடியாக இருந்த நிலையில் புதன்கிழமை 92.75 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 23.42 டிஎம்சி ஆக உள்ளது.
அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 1,200 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
