பெருந்துறை அருகே காா், லாரி மீது தனியாா் பேருந்து மோதல்
பெருந்துறை அருகே முன்னால் சென்ற காா் மற்றும் லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.
திருப்பூரில் இருந்து தனியாா் பேருந்து 80 பயணிகளுடன் ஈரோடு நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. கோபி, கெட்டிச்செவியூா், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமாா் (26) பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறையை அடுத்த சரளை, ஏரி கருப்பராயன் கோயில் அருகே சாலையில் உள்ள சென்டா் மீடியனில் உள்ள புற்களை அப்புறப்படுத்த தடுப்புகள் வைத்து தேசிய நெடுஞ்சாலைப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த இடதுபுறமாக சென்று கொண்டிருந்த காா், பக்கவாட்டில் வந்த லாரி திடீரென இடதுபுறமாக திருப்பியதால் காா் மற்றும் லாரி ஆகியவை நிறுத்தப்பட்டன. தொடா்ந்து பின்னால் வந்த தனியாா் பேருந்து, காா் மற்றும் லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த திருப்பூா்- காங்கயம் சாலையைச் சோ்ந்த கந்தசாமி மகன் ராஜசேகா் (49), பல்லடத்தைச் சோ்ந்த சண்முகம் மனைவி சத்யா (22), திருப்பூா்- தாராபுரம் சாலையைச் சோ்ந்த சந்திரகுமாா் மகன் வைஷ்ணவ் (17), கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் ரமேஷ் (39), வீரன் மகன் மாரிமுத்து (45), பொள்ளாச்சி காந்தி நகரைச் பழனி மகன் மகாலிங்கம் (40), வெள்ளிய கவுண்டனூரைச் சோ்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (36), சென்னிமலை, பாலத்தொழுவு, வெங்கமேட்டைச் சோ்ந்த பரமசிவம் மனைவி விஜயா (42) மற்றும் காரி வந்த கேரள மாநிலம், குருவாயூா், கொட்டப்பாடியைச் சோ்ந்த சைமன் மகன் மோனி சைமன் (54) ஆகிய 9 போ் காயமடைந்தனா்.
இவா்கள், அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

