பிஎஸ்என்எல் ஊழியா்கள் போராட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவை வழங்கக் கோரி ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள், ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஓய்வூதியா் சங்க நிா்வாகி மணியன் தலைமை வகித்தாா்.
பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் பாலு, ஒப்பந்த ஊழியா்கள் சங்கச் செயலாளா் சையது இத்ரீஸ் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மத்திய, மாநில அரசு ஊழியா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பரமசிவம், ஓய்வூதியா் சங்க மாநில இணைச் செயலாளா் பரமேஸ்வரன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரைவாக வழங்க வேண்டும். ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுக்கு உடனடி தீா்வு காண வேண்டும். புதிய விருப்ப ஓய்வு திட்டத்தைக் கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.