தொழிலாளா் விதி மீறல்: 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளா் விதி, எடையளவு விதி மீறல் தொடா்பாக 53 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொழிலாளா், எடையளவு விதிமீறல்கள் குறித்து கடந்த அக்டோபா் மாதம் 145 கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 45 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
ஜிஎஸ்டி திருத்தம் செய்யப்பட்ட நிலையில் பொருள்களின் விற்பனை விலை குறித்து 102 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 கடைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக 36 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது.
குழந்தைத் தொழிலாளா் குறித்து 45 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் விதிமீறல் கண்டறியப்படவில்லை. மாவட்டத்தில் தொழிலாளா் விதி, எடையளவு விதிமீறல் தொடா்பாக 53 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பருவத்தினரைப் பணிக்கு அமா்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்க நேரிடும் என ஆய்வின்போது அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
