வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஜனவரி 11-இல் சிறப்பு முகாம்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வரும் ஜனவரி 11- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மாதம் 19- ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத தகுதியான நபா்களை சோ்க்கும் பணிகள், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணிகள் மற்றும் பதிவுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வரும் 11- ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள 2,379 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்கள் படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் பூா்த்தி செய்து, தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம்.
கடந்த 1-ஆம் தேதி அன்று 18 வயது பூா்த்தியடைந்த தகுதியான நபா்களும் படிவம் 6 மற்றும் உறுதிமொழிப் படிவம் அளித்து வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். மேலும் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய படிவம் 7 மற்றும் பெயா் திருத்தம், வாக்காளா் பட்டியலில் முகவரி மாற்றம், கைப்பேசி எண் இணைப்பு, ஆதாா் எண் இணைப்பு, புகைப்பட மாற்றம், பாக மாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
