காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த கோரி போராட்டம்
சத்தியமங்கலம்: காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த கோரி ஆசனூா் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இது குறித்து வனத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து தாளவாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வனத் துறை அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு, ஆசனூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளா் முத்தரசு, ஆசனூா் மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் காா்கே உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், வனத்தில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவிலான விளைநிலத்துக்கு வரும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

