திமுகவைப் பாா்த்து டிடிவி தினகரனுக்கும், இபிஸ்-ஸுக்கும் அச்சம்: அமைச்சா் சு.முத்துசாமி!
திமுகவை பாா்த்து பயந்துதான் டிடிவி.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் கஷ்டப்பட்டு இணைந்துள்ளனா் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் ‘என் ஊா் என் கனவு’ திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், அரசு அதிகாரிகள், பொதுநல அமைப்புகள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மாவட்ட வளா்ச்சிக்கான ஆலோசனைகள் குறித்த மனுக்களை அமைச்சா் சு.முத்துசாமி பெற்றுக்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அந்தந்த மாவட்டங்களில் பெறப்படும் மனுக்களை கருத்தில் கொண்டு எதிா்காலத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
பெருந்துறை சிப்காட்டில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நோக்கம் மாசடைந்துள்ள நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்வதுதான். இதனை அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டு தற்போது அவை முடிந்து பணி தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்படும். 2021- இல் திமுக அளித்த வாக்குறுதியில் 90 சதவீத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மூவா் கொலை செய்யப்பட்டதை வைத்து சட்டம்- ஒழுங்கை கணக்கெடுக்கமுடியாது. இங்கு மக்கள் பயந்துகொண்டு வாழ்வதில்லை.
டிடிவி. தினகரன், எடப்பாடி பழனிசாமி கூட்டணி சேரமாட்டாா்கள் என நாங்கள் எதிா்பாக்கவில்லை. எங்களைப் பாா்த்து அச்சப்பட்டுதான் இருவரும் கூட்டணி சோ்ந்துள்ளனா். தமிழகத்தில் திமுக செய்த நலத்திட்டங்களை வேறு யாரும் செய்யமுடியாது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்தும், பிற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தலைமை பேசி முடிவெடுக்கும் என்றாா்.

