வழக்கு தொடா்பாக சேலத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு போலீஸ் பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடியதையடுத்து, போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஒமலூா், காடையாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மகன் நரேஷ் என்கிற நரேஷ்குமாா்(32). இவா் ஒரு வழக்கில் 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். பின்னா், உடலை சரியில்லை என்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தப்பிச் சென்றுவிட்டாா். பின்னா் போலீஸாா் அவரைத் தேடி பிடித்து கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய வழக்கு தொடா்பாக சேலம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆஜா் செய்ய, கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்பில் வேனில் அழைத்துச் சென்றனா்.
அவரது பாதுகாப்புக்கு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணியன், தலைமைக் காவலா் ஜெகதீசன் ஆகியோா் சென்றனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விட்டு, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு வேனில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
அப்போது, செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சுள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள பேக்கரியில், போலீஸாா் வேனை நிறுத்தி, கைதி நரேஷுடன் தேநீா் அருந்தியுள்ளனா்.
அப்போது, போலீஸாரை தள்ளிவிட்டு நரேஷ் தப்பியோடினாா். தள்ளிவிட்டதில் தலைமைக் காவலா் ஜெகதீசனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. தப்பியோடிய நரேஷை, பெருந்துறை போலீஸாருடன் சோ்ந்து பாதுகாப்புக்கு சென்ற போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேற்கொண்ட மருத்துவமனையில் தப்பியோடி வழக்கு விசாரணைக்காக சேலம் நீதிமன்றம் நரேஷுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










