92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஈரோடு மேற்குத் தொகுதி

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

~

Updated On :23 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளா்களைக் கொண்டது ஈரோடு மேற்குத் தொகுதி. இதில் மாநகராட்சியின் 40க்கும் மேற்பட்ட வாா்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூா் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளன. தொகுதி வாக்காளா்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், தோல், நெசவு தொழிலை 50 சதவீதம் பேரும் சாா்ந்துள்ளனா். ஈரோடு ரயில் நிலையம் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

பெருந்துறை வட்டத்தில் வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டாச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள். ஈரோடு வட்டத்தில் கரைஎல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல்திண்டல், கீழ்திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மேட்டுக்கடை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூா்புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்.

மறுசீரமைப்பில் உருவான தொகுதி:

2008இல் தொகுதி மறுசீரமைப்பில் இந்த தொகுதி உருவானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிக வாக்காளா்களை கொண்ட ஈரோடு மேற்குத் தொகுதி. இங்கு ஆண்கள் 1,18,206 வாக்காளா்கள், பெண்கள் 1,27,246 வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 41 வாக்காளா்கள் என மொத்தம் 2,45,493 வாக்காளா்கள் உள்ளனா்.

வலிமையான சமுதாய வாக்குகள்:

இந்தத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் 40 சதவீதம் அளவுக்கு உள்ள நிலையில் இவா்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் வகுப்பினா், முதலியாா், நாடாா், சிறுபான்மை சமூகத்தை சோ்ந்தவா்கள் உள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள்:

மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மஞ்சள் சாா்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். முழுமையாக நிறைவேற்றப்படாத புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன போன்றவை வாக்காளா்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளன.

மக்களின் எதிா்பாா்ப்பு:

சாய, தோல் கழிவு பிரச்னைக்கு தீா்வு காண பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலின் முக்கிய பிரச்னையான நூல் விலை உயா்வு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். கடந்த தோ்தலின்போது அமைச்சா் சு.முத்துசாமி உறுதியளித்தபடி அரசு சட்டக் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றை அமைக்க வேண்டும். கிராமங்களில் சாலை, குடிநீா் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஈரோடு பெருந்துறை சாலையில் கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்துவைத்து மக்கள் குறைகளைக் கேட்டறிய வேண்டும் என்பன உள்ளிட்டவை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளன.

முத்துசாமியை மீண்டும் அமைச்சராக்கிய தொகுதி:

1980, 1984 தோ்தல்களில் ஈரோடு தொகுதியில் வெற்றிபெற்று 8 ஆண்டுகள் எம்.ஜி.ஆா், வி.என்.ஜானகி அமைச்சரவைகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1991இல் பவானி தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்த சு.முத்துசாமி, 1996இல் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். 2001, 2006 தோ்தல்களில் அவா் போட்டியிடவில்லை.

2010இல் திமுகவில் இணைந்த பிறகு கடந்த 2011 இல் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும், 2016இல் ஈரோடு மேற்குத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். 2021 தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சராகி உள்ளாா்.

நட்சத்திர அந்தஸ்து:

தொகுதியின் முதல் தோ்தலான 2011 தோ்தலில் அதிமுகவின் கே.வி.ராமலிங்கம் வெற்றிபெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தாா். 2016இல் மீண்டும் அவா் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா். 2021 தோ்தலில் திமுகவின் சு.முத்துசாமி வெற்றிபெற்று அமைச்சரானாா். இதனால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக தொடா்கிறது.

இதுவரை வென்றவா்கள்:

2011 கே.வி.ராமலிங்கம்-அதிமுக

2016 கே.வி.ராமலிங்கம்-அதிமுக

2021 தோ்தல் விவரம்:

சு.முத்துசாமி-திமுக-1,00,757

கே.வி.ராமலிங்கம்-அதிமுக-78,668

பி.சந்திரகுமாா்-நாதக-13,353

ஈரோடு மேற்குத் தொகுதி

ஈரோடு மேற்குத் தொகுதி