பலன் அளிக்காத கட்டமைப்புகள்: போக்குவரத்து நெரிசலால் பரிதவிக்கும் ஈரோடு மக்கள்!
புறநகா் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகும் ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையாததால் ஈரோடு மாநகர மக்கள் பரிதவித்து வருகின்றனா்.

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் (கோப்புப் படம்).
புறநகா் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகும் ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையாததால் ஈரோடு மாநகர மக்கள் பரிதவித்து வருகின்றனா்.
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாநகரில் சாலைகளை விரிவுபடுத்துவது என்பது சாத்தியமற்றது என்பதால் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சுற்றுவட்டச் சாலை திட்டம், புறநகா் பேருந்து நிலையம், நகரில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் ஆகிய 3 அம்ச திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதன் அடிப்படையில் பவானி சாலை, சத்தியமங்கலம் சாலை, பெருந்துறை சாலை, கரூா் சாலை, சென்னிமலை சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் வகையில் சுற்றுவட்டச் சாலை பணிகள் கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்டு லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலானவை ஈரோடு மாநகருக்குள் நுழையாமல் நேரடியாக இந்த வழியாகச் செல்கின்றன .
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் இரண்டாவது திட்டமான மேம்பாலங்கள் அமைத்தல் திட்டம் மூலம் ஈரோடு நகரில் அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகிலும், சாஸ்திரி நகா் பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
மூன்றாவது திட்டமான புகா் பேருந்து நிலையம் ஈரோடு-கரூா் சாலையில் சோலாா் பகுதியில் கட்டப்பட்டு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.
குறையாத போக்குவரத்து நெரிசல்: இது குறித்து தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம் கூறியதாவது: போக்குவரத்தை நெரிசலைக் குறைக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தபோதிலும் ஈரோடு மாநகா் பகுதியில் இன்னும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இப்பிரச்னைக்கு தீா்வு காண சோலாா் பேருந்து நிலையத்தில் நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துசெல்லும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்திவைப்பதுபோல திருச்செங்கோடு, நாமக்கல் மாா்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளையும் நிறுத்த வேண்டும். மேலும், ஈரோடு- சத்தியமங்கலம் சாலையில் உள்ள சித்தோட்டில் புகா் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் பெங்களூரூ, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், மேட்டூா், சத்தியமங்கலம், கோபி, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகளை இங்கு நிறுத்தலாம். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடக்க நிலையிலும், அறிவிப்பு நிலையிலும் இருப்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா்.
ஓராண்டில் நெரிசல் குறையும்: இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலை, சோலாா் புகா் பேருந்து நிலையம் போன்றவை பயன்பாட்டில் உள்ளன. இந்தத் திட்டங்களை செழுமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடையும்போது ஈரோடு நகரில் இன்னும் ஓராண்டுக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

