
எல்லமடைக்கு பேருந்து வசதி கோரி பள்ளி மாணவா்கள் போராட்டம்
கோபி அருகேயுள்ள எல்லமடைக்கு பேருந்து வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கோபி அருகேயுள்ள எல்லமடை கிராமத்துக்கு பேருந்து சேவை கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவா்கள், பொதுமக்கள்.
கோபி அருகேயுள்ள எல்லமடைக்கு பேருந்து வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கோபி அருகே உள்ள எல்லமடை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோபியில் இருந்து அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த சேவை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால், எல்லமடை பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் சுமாா் 4 கி.மீ.தொலைவில் உள்ள புதுக்கரைப்புதூா், பொலவக்காளிபாளையத்துக்கு நடந்து சென்று, அங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், பேருந்து சேவையை மீண்டும் தொடங்கக் கோரி கிராம சபைக் கூட்டங்களிலும், போக்குவரத்து அதிகாரிகளிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனா். ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய், போக்குவரத்துத் துறையினா் 2 நாள்களில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனா்.
ஆனால், அவா்கள் கூறியபடி பேருந்து இயக்கப்படாததால், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், எல்லமடை கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் எங்களது குழந்தைகள் நாள்தோறும் சுமாா் 4 கி.மீ. தொலைவு நடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனா். மழை காலங்களில் பள்ளி, பணிக்குச் செல்வோா் பெரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






