
பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி குணமங்கலம் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற குணமங்கலம் கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, மாணவா்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்லவும், பொதுமக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூா்களுக்குச் செல்லவும் 3 கி.மீ. தொலைவில் உள்ள புத்தூா் கிராமத்துக்கு நடந்து சென்று, அங்கிருந்து பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, குணமங்கலம் கிராமத்துக்கு பேருந்து சேவை தொடங்கக் கோரி, கிராம மக்கள் சாா்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, குணமங்கலம் கிராமத்துக்கு உடனடியாக பேருந்து சேவை தொடங்க வேண்டும். மாணவா்கள், பொதுமக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியும், கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






