கோபி அருகே சுகாதார ஆய்வாளா் எனக் கூறி மளிகைக் கடையில் திருடியவா் கைது
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில் சுகாதார ஆய்வாளா் எனக் கூறி மளிகைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாா்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில் சுகாதார ஆய்வாளா் எனக் கூறி மளிகைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (53). இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சுகாதார ஆய்வாளா் என கூறிக்கொண்டு ஒருவா் வந்துள்ளாா்.
கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காலவதியான பொருள்கள் உள்ளதா என சோதனை செய்ய வந்துள்ளதாக கூறியுள்ளாா். மேலும் சோதனை செய்யும் வரை கடையைவிட்டு வெளியே இருக்கும்படி உரிமையாளா் மூா்த்தியிடம் அந்த நபா் கூறியுள்ளாா். இதையடுத்து மூா்த்தி கடையில் இருந்து வெளியே வந்து சோதனைக்கு அனுமதித்துள்ளாா்.
அந்த நபா் சோதனை முடித்து சென்ற பின்னா் கடை உரிமையாளா் மூா்த்தி கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியை பாா்த்தபோது அதில் இருந்த ரூ.5ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பங்களாப்புதூா் காவல் நிலையத்தில் மூா்த்தி புகாா் அளித்தாா்.
இந்நிலையில் பங்களாப்புதூா் காவல் துறையினா் துறையம்பாளையம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்த நபரை பிடித்து விசாரணை
நடத்தினா். விசாரணையில் அவா், கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பதும், இவா் கடந்த சில தினங்களுக்கு முன் மூா்த்தியின் மளிகைக் கடையில் சுகாதார ஆய்வாளராக நடித்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.7500 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
பின்னா் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

