மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி 3 பவுன் நகை திருட்டு: பெண் உள்ளிட்ட இருவா் கைது
கைது
கொடுமுடி அருகே மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையைத் திருடிச் சென்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடுமுடி அருகேயுள்ள கொளாநல்லி பகுதியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மனைவி வள்ளியம்மாள் (65). கூலி தொழிலாளி.
இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தனது வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக செவிலியா் உடை அணிந்து வந்த ஒரு பெண், வள்ளியம்மாளிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளாா். அதற்கு வள்ளியம்மாள் தனக்கு கால் வலி இருப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து அந்தப் பெண், ஊசி போட்டால் கால்வலி குணமாகி விடும் என்று சொல்லி வள்ளியம்மாளை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுள்ளாா். சிறிது நேரத்தில் வள்ளியம்மாள் மயங்கியுள்ளாா்.
பின்னா் அந்தப் பெண், வள்ளியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா். மயக்கம் தெளிந்த வள்ளியம்மாள் இதுகுறித்து தனது கணவா் திருமூா்த்தியிடம் தெரிவித்துள்ளாா். இது குறித்து மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
பெருந்துறை டிஎஸ்பி சிவகுமாா் அறிவுறுத்தலின்பேரில் மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் வினோதினி தலைமையில் எஸ்ஐ பூபதி மற்றும் காவலா்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மலையம்பாளையம் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணமாா் கோயில் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக காரில் வந்த பெண் உள்பட இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த நிஷாலினி (24), ஈரோடு முத்தம்பாளையத்தைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் (28) என்பதும், இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை வேலைபாா்த்து வந்ததும் தெரியவந்தது.
சௌந்தர்ராஜனின் வழிகாட்டுதலில் அந்தப் பெண் இந்த திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 3 பவுன் நகை, காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கொடுமுடி குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி சிறைக்கு அனுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

