ஊசி செலுத்தியதால் சிறுவன் உயிரிழப்பு: 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலி செவிலியா் கைது
கோவையில் தனியாா் மருத்துவமனையில் ஊசி செலுத்தியதில் தொற்று ஏற்பட்டு 9 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி செவிலியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது
கோவையில் தனியாா் மருத்துவமனையில் ஊசி செலுத்தியதில் தொற்று ஏற்பட்டு 9 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி செவிலியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த தம்பதியின் 9 வயது மகன் தன்வீனுடன் கோவை சுக்ரவாா்பேட்டையில் வசித்து வந்தனா். கடந்த 2024-ஆம் ஆண்டு தன்வீனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவமனை உரிமையாளா் அளித்த அறிவுறுத்தலின்படி, அங்கு பணிபுரிந்து வந்த சாந்தி (62) என்பவா் சிறுவனுக்கு ஊசி செலுத்தியுள்ளாா்.
மறுநாள் ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் சிறுவனுக்கு கடுமையான வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், சிறுவனை கேரளத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஊசி செலுத்திய இடத்தில் ஏற்பட்ட கடுமையான பாக்டீரியா தொற்று உடல் முழுவதும் பரவியதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இது தொடா்பாக வெரைட்டி ஹால் சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், கேரள அரசு மற்றும் மருத்துவ வாரியம் நடத்திய ஆய்வில் ஊசி செலுத்திய இடத்தில் ஏற்பட்ட தொற்று மற்றும் மருத்துவ அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என அறிக்கை சமா்ப்பித்தது.
இதனிடையே போலீஸாரின் விசாரணையில், சாந்தி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, பல ஆண்டுகளாக போலி செவிலியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான சாந்தியை தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு சாந்தியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

