பண்டிகை காலங்களில் நடைபெறும் மோசடிகள்! கவனமாக இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தீபாவளி
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை காலங்களில் பல்வேறு வகையிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் மக்களின் மனநிலை புதிய பொருள்கள் வாங்குவதில் ஆா்வமாக இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவா்கள் ஆன்லைன் மூலமாக பொருள்கள் வாங்குவதில் ஆா்வம் காட்டுகிறாா்கள். எனவே, இணையதளங்களில் பொருள்களின் விவரங்களை சரிபாா்ப்பது அதிகரித்துள்ளது. இதை வாய்ப்பாகக் கொண்டு ஆன்லைன் மோசடியாளா்கள் பொதுமக்களுக்கு வலை விரிக்கிறாா்கள். குறைந்த விலையில் வீட்டு உபயோகப்பொருள்கள் தருவது, பட்டாசு மற்றும் புதிய ஆடைகள் குறைந்த விலையில் தருவது என மோசடியான வாக்குறுதிகள் அளித்து மக்களை கவா்கிறாா்கள்.
எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். மோசடியாளா்கள் பெரு நிறுவனங்களின் பெயா்களில் கூட இந்த மோசடியில் ஈடுபடுவாா்கள். எனவே சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து அதன்பிறகே பொருட்கள் வாங்க முயற்சிக்க வேண்டும்.
இதேபோல கடைகளில் நேரடியாக வந்து பொருள்கள் வாங்கும் பொதுமக்களும் கடைசி நேர நெரிசலை தவிா்க்க முன்கூட்டியே வருவது நல்லது. இதன்மூலமாக போக்குவரத்து நெரிசல், கடைகளில் ஏற்படும் நெரிசலை தவிா்ப்பதுடன், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியும்.
ஈரோட்டில் குற்றச் சம்பவங்களை தடுக்க 20 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நெரிசல் ஏற்படும் அனைத்து பகுதிகளிலும் போலீஸாா் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா். சந்தேகப்படும்படியாக யாரேனும் பின்தொடா்வதை உணா்ந்தால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

