
பவானி அருகே மலைக் கோயிலுக்குச் சென்று வனப் பகுதியில் சிக்கிய பக்தா்கள் மீட்பு

வனப் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட பக்தா்கள்.
பவானி அருகே மலைக்கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வழி மாறி சிறுத்தை நடமாட்டம் நிறைந்த வனப் பகுதிக்குள் சென்று சிக்கித் தவித்த பக்தா்களை வனத் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா்.
பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே பாலமலை உச்சியில் சித்தேஸ்வரன் கோயில் உள்ளது. ஈரோடு-சேலம் மாவட்ட எல்லையில் உள்ள இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், சித்தோட்டை அடுத்த நசியனூரைச் சோ்ந்த 3 சிறுவா்கள், ஒரு பெண் உள்பட 7 போ் கொண்ட குழுவினா் மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வாகனங்களை நிறுத்திவிட்டு மலையேறிச் சென்றுள்ளனா். மலை உச்சியில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு திரும்பும்போது இருள் சூழ்ந்துவிட்டதால் சிறுத்தை நடமாட்டம் நிறைந்த வனப் பகுதிக்குள் வழிமாறி சென்றுவிட்டனா்.
வெகு நேரமாகியும் வெளியேற முடியாமல் தவித்த பக்தா்கள், கைப்பேசியில் உதவிக்கு யாரையும் அழைக்கவும் முடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின்னா் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சேலம் மாவட்டம் கொளத்தூா் போலீஸாா், மேட்டூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷாா்படுத்தப்பட்டனா். மேட்டூா் வனச் சரக அலுவலா் செங்கோட்டையன் உத்தரவின்பேரில் வனக் காப்பாளா் மாரியப்பன் தலைமையிலான வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, 7 பேரையும் மீட்டு அடிவாரத்துக்கு அழைத்து வந்தனா்.
சிறுத்தை நடமாட்டம் நிறைந்த வனப் பகுதியில் சிக்கிக் கொண்ட பக்தா்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






