சுதந்திர தினத்தையொட்டி மசினகுடி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
யானை வழித்தட நிலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மசினகுடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் ரிசார்ட் வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வரும் பரபரப்பான நிலையில், மசினகுடி கிராமத்தில் நடைபெற்ற இந்த கிராம சபைக்கூட்டத்தில் மசினகுடி ஊராட்சிக்குள்பட்ட வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம், மாயாறு, பூதநத்தம், தெப்பக்காடு, சிங்காரா மற்றும் ஆச்சக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில், வன உரிமை அங்கீகார சட்டத்தின்கீழ் பழங்குடியினர் உள்ளிட்ட அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டுமெனவும், வனப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானை வழித்தட நிலங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கஜா 2011 அறிக்கையை மக்கள் பாதிக்காதவாறு செயல்படுத்த வேண்டுமெனவும், மக்களை பாதிக்கும் பிரிவு 125ஐ உடனடியாக நீக்க வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.